தமிழில் புதிதாக வரவிருக்கும் படமான “நெடுநல்வாடை’யில்” நடித்திருக்கும் புதுமுக நடிகை அதிதி என்கிற ஆதிரா சந்தோஷ். இப்படத்தை அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்குகிறார். தற்போது தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் நாயகி அதிதி திடீரென்று செப்டம்பர் 29, 2016 அன்று தற்கொலைக்கு முயன்றார்.
நடிகை அதிதி நமது “ஒற்றன் செய்தி” இணையதளத்திற்கு ஒரு பிரத்தியேக பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, இயக்குனர் செல்வக்கண்ணன் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார், கொலை மிரட்டல் விடுத்தார், கொலை செய்ய முயற்சித்தார் என்பதுதான். அதிதியை கதாநாயகியாக அறிமுகப்படுத்திய செல்வக்கண்ணன் முதலில் அதிதியை நன்றாகத்தான் நடத்தியுள்ளார். பிறகு அதிதியிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார் செல்வக்கண்ணன். இக்காதலை நடிகை மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்த இயக்குனர், அதிதியிடம் தவறாக நடக்க ஆரம்பித்ததாக சொல்கிறார் அதிதி.
அதிதியின் கோபத்தால் மேலும் கடுப்பாகி அவரிடம் மிருகத்தனமாக நடந்துள்ளார். நடிகையின் கைப்பேசி மற்றும் அவருடைய உடைமைகளை இயக்குனர் செல்வக்கண்ணன் கையகப்படுத்தியுள்ளார். பலமுறை அவருடைய காதலை ஏற்றுக்கொள்ளும்படி அதிதியை நிர்பந்தித்துள்ளார் செல்வக்கண்ணன். அதிதி மீது இருந்த கோபத்தின் காரணமாக, ஒரு நாள் செல்வகண்ணன் அதிதியின் கழுத்தை பிடித்து சுவற்றில் மோதியுள்ளார், அதிதியை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
மேலும் அதிதி கூறுகையில், இயக்குனர் செல்வக்கண்ணன் அவருடைய கூட்டாளிகள் சுமார் 20 முதல் 30 பேருடன் தான் நடித்து கொண்டிருந்த படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அதிதியை தகாத வார்த்தைகளால் திட்டி அவரையும் அவருடைய தோழியையும் தாக்கி, அவரை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் இழுத்து சென்றுள்ளனர். உடனடியாக அதிதியின் தோழி காவல்துறைக்கு தொலைபேசியில் புகார் அளித்ததால், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அதிதியை செல்வக்கண்ணன் மற்றும் அவருடைய ஆட்களிடமிருந்து மீட்டுள்ளனர்.
அதிதி தனக்கு செல்வக்கண்ணன் மூலமாக ஏற்பட்டுவரும் இன்னல்கள் பற்றி காவல்துறை, முதலமைச்சர் தனிப்பிரிவு, தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கில்ட் ஆகிய இடங்களில் புகார் அளித்துள்ளார். அதிதியின் புகாரை விசாரித்த காவல்துறையினர் செல்வக்கண்ணனுக்கு ஆதரவாகத்தான் பேசுகின்றனர் என்று அதிதி கூறுகிறார். நடிகர் சங்கத்தில் அதிதி உறுப்பினராக இல்லாத காரணத்தினால் அவருடைய புகாரை நடிகர் சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. இயக்குனர் சங்கமும், அதிதி இயக்குனர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத காரணத்தினால் புகாரை ஏற்றுகொள்ள மறுத்துள்ளது. இருப்பினும் நடிகர் விஷால் தன்னால் முடிந்த அளவுக்கு இந்த பிரச்னையை பேசி முடிக்க முயற்சிக்கிறேன் என்று அதிதியிடம் கூறியுள்ளார். நடிகர் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர் அதிதியை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். இந்நிலையில் நடிகை அதிதி உயிருக்கு பயந்து, பாதுகாப்பு கருதி மருத்துவமனையிலிருந்து வெளியேறி சொந்த மாநிலமான கேரளாவிற்கு கிளம்பிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.
இந்தியா சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகளாகியும், இன்னும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகத்தான் உள்ளது. சிறுமிகள் மற்றும் பெண்கள் கடத்தப்படுகிறார்கள், கற்பழிக்கப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள் அல்லது அனைத்துக்கும் பலியாகிறார்கள்.
காவல்துறை மற்றும் பெண்கள் & குழந்தைகள் நலத்துறையினர் அதிதியின் விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்ப்போம்.
நடிகை அதிதி என்கிற ஆதிரா சந்தோஷ் “ஒற்றன் செய்தி” இணையதளத்திற்கு அளித்த பிரித்தியேக காணொளி பேட்டியினை கிழே காணலாம்: