பிசாசு – விமர்சனம்

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கார் மோதிய விபத்தில் மரணமடைகிறார் இளம்பெண் பிரயாகா.. அவரை காப்பாற்ற, மருத்துவமனைக்கு எடுத்துச்செல்கிறான் வயலின் இசைக்கலைஞரான வாலிபன் நாகா.. ஆனால் பிரயாகவோ சிகிச்சைக்கு முன்பே நாகாவின், கையை பிடித்தபடி கண்மூடுகிறார்.

அன்றைய தினத்தில் இருந்து நாகாவின் வீட்டில் சில விசித்திரமான சம்பவங்கள், நிகழ்கின்றன. அங்கே அமானுஷ்யமாக ஏதோ ஒன்று இருப்பதாக உணரும் நாகாவும் அவன் நண்பர்களும் ஆவியை கண்டுபிடிக்கும் ஒரு பெண்ணை கூட்டிவர அவரை விரட்டியடிக்கிறது அங்கே இருக்கும் பிரயாகாவின் ஆவி..,

இப்போது பிரயாகாவின் விபத்துக்கு காரணமானவனை கண்டுபிடிக்க நண்பர்களுடன் இறங்குகிறான் நாகா.. அதேபோல பிரயாகாவின் இறப்பால் துடிக்கும் அவரது தந்தை ராதாரவியும் விபத்துக்கு காரணமானவனை தேடுகிறார்.

பிரயாகாவின் விபத்துக்கு காரணமானவன் யார், ஏன் பிசாசாக உலாவரும் பிரயாகா அவனை கொல்ல முயற்சிக்கவில்லை, பாசமான தந்தை ராதாரவியை விட்டுவிட்டு, நாகாவின் வீட்டில் தஞ்சம் புகுந்தது ஏன் இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது க்ளைமாக்ஸ்.

கிட்டத்தட்ட பாதிமுகத்தை மறைக்கும்படியான நீண்ட முடி ஹேர்ஸ்டைலுடன் வரும் ஹீரோ நாகா ஆரம்பத்திலேயே நம்மை கதைக்குள் இழுத்து விடுகிறார்., அவருடைய மிரட்சி நம்மையும் சேர்த்து பயப்படவைக்கிறது. உயிருடன் ஒரே ஒரு காட்சியில் மட்டும் சுய உருவத்துடன் வந்து விபத்திற்குப்பின் பிசாசாக மாறும் பிரயாகா நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். இனி ஹீரோயின் வாய்ப்புகள் கதவை தட்டும்.

நீண்ட நாட்கள் கழித்து டத்தோ ராதாரவிக்கு இதில் சொல்லிக்கொள்ளும்படியான பவர்புல்லான, ஒரு பாசமுள்ள தந்தை வேடம்.. அதிலும் இறந்துபோன மகளுடன் பேசும் காட்சியில் நம்மை உருகவைத்து விடுகிறார்.

மிஸ்கினின் படங்களில் நடிகர்கள் மறைந்து கதையின் கதாபாத்திரங்கள் மட்டும் தெரிவதே அவரது படத்திற்கு ப்ளஸ்ஸாக அமைந்துவிடும்… அந்தவகையில் நாகாவின் அம்மாவாக இயல்பான நடிப்பை தந்திருக்கிறார் அறிமுகம் கல்யாணி நடராஜன்.. பக்கத்து வீட்டு அக்காவாக வரும் வினோதினியின் நடிப்பிலும் படு யதார்த்தம்..

இடைவேளைக்கு முன் வரை ஆவியின் இருப்பை உணர வைக்கும் காட்சிகள் திக் திக் ரகம்.. அதிலும் தன் பங்கிற்கு கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார் மிஸ்கின். இடைவேளைக்குப்பின் பிரயாகாவின் மரணத்திற்கு காரணமானவன் யார் என தேடும் காட்சிகள் பரபரப்பு..

தனது பின்னணி இசையால் படத்தின் பயம் காட்டும் காட்சிகளுக்கு, மேலும் திகிலூட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் அரோல் குரோலி. அதிலும் அந்த அடுப்படி காட்சி.. மிரட்டல்.. கூடவே ரவிராயின் ஒளிப்பதிவு மிஸ்கினுக்கு தேவையான உதவியை செய்திருக்கிறது.

மிஸ்கின் எப்போதுமே நல்ல படத்தை தரவேண்டும் என்பதில் மெனக்கெடுவார். அந்தவகையில் இந்த திகில் படத்தை வித்தியாசமான பின்னணியில் அவர் கொடுக்க முயற்சித்துள்ளது பல இடங்களில் நன்றாகவே தெரிகிறது. ஆங்காங்கே சிற்சில முரண்கள் இருந்தாலும் வழக்கமான பேய், பிசாசு படங்களில் இருந்து இந்த ‘பிசாசு’ தனித்து தெரிவதுதான் மிஸ்கினின் வெற்றி..