நாய்கள் ஜாக்கிரதை – விமர்சனம்

சோறு போட்டு வளர்த்தவரின் உயிரை காப்பாற்ற தன்னுடைய உயிரைக்கொடுக்கும் நாய் என்கிற தேவர் காலத்து பார்முலா தான் கதை.. ஆனால் அதில் ஜாக்கிரதையாக நகைச்சுவையையும் த்ரில்லிங்க்கையும் கலந்து ‘நாய்கள் ஜாக்கிரதை’யாக்கியிருக்கிறார்கள்.

பெண்களை கடத்தும் கும்பலின் தலைவன் ரேடியோ பாலாஜியை அட்டாக் செய்கிறார் போலீஸ்காரரான சிபிராஜ். பதிலுக்கு அவரது மனைவியை கடத்துகிறார்கள் கடத்தல்காரர்கள்.. தனது வளர்ப்பு நாயான ‘ஈட்டோ’வின் துணையுடன் தன் மனைவியை சிபிராஜ் மீட்பதுதான் க்ளைமாக்ஸ்.

சிபிராஜும் நாயும் சேர்ந்து அடிக்கும் கூத்துக்கள் தான் முதல் பாதிவரைக்கும்.. அதனால் குழந்தைகள் ரசித்து சிரிக்க ஏகப்பட்ட ஏரியாக்கள் இருக்கின்றன.. நாய்க்கு ஏற்ப ஒத்துழைத்து தன் இருப்பையும் தக்கவைத்துக்கொல்கிறார் சிபிராஜ்.

சிபிராஜின் மனைவியாக அருந்ததி.. இவரை வில்லன் கும்பல் கடத்தியதிலிருந்து, பாவம்.. ஒரு மரப்பெட்டிக்குள்ளேயே, ஹெல்ப் என்கிற வசனத்துடன் மட்டும் வேலை முடிந்து விடுகிறது. ஈத்தோ என்கிற நாயும் இன்னொரு ஹீரோவாகவே மாறியிருக்கிறது. அதன் சேட்டைகளை விவரிப்பதை விட பார்த்து மகிழ்வதுதான் சிறந்ததாக இருக்கும்..

வில்லனாக ரேடியோ பாலாஜி.. தான் இதுவரை பார்த்த மிரட்டல் சைக்கோ வில்லன்களில் நான்கு பேரை மிக்ஸ் பண்ணி புதுசாக ஒரு முகம் காட்டுகிறார். ஆனால் பயம் தான் வரவில்லை.. தரண்குமாரின் இசையில் டாக்கி ஸ்டைல் பாடல் ஆட்டம்போட வைக்கிறது. ரசித்து சிரிக்கும்படியான ஒரு பொழுதுபோக்கு படத்தை தந்து வெற்றியை பறித்திருக்கிறார் இயக்குனர் சக்தி சௌந்திரராஜன்.