கத்தி – விமர்சனம்

நீர் ஆதாரம் உள்ள விவசாய நிலங்களை அபகரிக்க முயலும் பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராக விஜய் & விஜய் நடத்தும் போராட்டமே ‘கத்தி’.. ஒருவர் சமூக சேவகர் ஜீவானந்தம்.. இன்னொருவர் கொல்கத்தா சிறையில் இருந்து தப்பிவந்த திருடரான கதிரேசன்.. ஜெயிலில் இருந்து தப்பிக்கும் கதிரேசன், விபத்தில் சிக்கிய ஜீவாவின் இடத்தில் அமர, ஜீவாவோ கொல்கத்தா சிறையில் அடைக்கப்படுகிறார்..

ஜீவாவின் இடத்துக்கு போனதும்தான் அவர் எவ்வளவு பெரிய சமூக போராளி என்பதும், விவசாயிகளிடம் இருந்து நிலங்களை அபகரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் சூழ்ச்சிக்கு எதிராக ஜீவா நடத்திய போராட்டமும் தெரியவருகிறது. மனம் மாறும் கதிரேசன் போராட்டத்தை தன் கையில் எடுக்கிறார்.. இறுதியில் வெற்றி யாருக்கு என்பதுதான் க்ளைமாக்ஸ்.

அமைதி, அதிரடி என இரண்டு கேரக்டர்களில் விஜய்.. இருவரில் கதிரேசனாக வரும் விஜய் பாட்டு, டான்ஸ், பைட்டு என ஆர்ப்பாட்டமாக ஸ்கோர் செய்கிறார். விவசாயிகளுக்கான போராட்டம், இருட்டில் வைத்து எதிரிகளை சம்ஹாரம் செய்வது, சமந்தாவுடன் ரொமான்ஸ் என வழக்கமான தனது பணிகளில் விஜய் எந்தக்குறையும் வைக்கவில்லை..

ஆனால் இரண்டு வேடங்களில் ஒருவரை அமைதியானவராக காட்டியிருப்பதை பார்க்கும்போது, இரண்டுபேரையும் வைத்து புகுந்து விளையாடியிருக்க வேணாமா என இயக்குனரிடம் கேட்க தோன்றுகிறது. சமந்தா விஜய்யை பார்த்ததும் காதலிக்கிறார்.. டூயட் பாடுகிறார்.. போராட்டத்தில் விஜய்க்கு துணை நிற்கிறார்.. டிபிகல் ஆக்ஷன் சினிமா நாயகிக்கு என்ன வேலையோ அதை சரிவர செய்திருக்கிறார்.

சதீஷின் காமெடி குறைவாக இருந்தாலும் படம் முழுவதும் குணச்சித்திர நட்சத்திரமாக மிளிர்கிறார். வில்லனாக வரும் நீள் நிதின் முகேஷ் ஹைடெக்காக வில்லத்தனம் பண்ணியிருக்கிறார். பாடல் காட்சிகள் வரும்போதெல்லாம் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைக்கிறது அனிருத்தின் இசை.

தங்கள் பிரச்சனை மீது மீடியாவின் வெளிச்சம் படுவதற்காக ஆறு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் காட்சி மனதை கனக்க வைக்கிறது. ஆனால் அதற்காக கிடைக்கிற கேப்பில் எல்லாம் எல்லா மீடியாக்களையும் தவறாக சித்தரித்திருப்பது ஏன் என்பது முருகதாஸுக்கே வெளிச்சம்.

துப்பாக்கியை மனதில் வைத்து செல்பவர்களுக்கு ‘கத்தி’ இன்னும் கொஞ்சம் கூர்மையாக இருந்திருக்கலாமோ என்கிற எண்ணம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் நாட்டின் அடிப்படை பிரச்சனையான, யாருமே கண்டுகொள்ள மறுக்கின்ற விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையை கையில் எடுத்ததற்காக ஏ.ஆர்.முருகதாஸை பாராட்டலாம்.