மெட்ராஸ் – விமர்சனம்

சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் வடசென்னை இளைஞன் கார்த்தி. இவரது நண்பர் ஒரு கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள கலையரசன். பல வருடங்களாக இவர்களது ஹவுசிங் போர்டில் உள்ள சுவரில் யாருடைய படத்தை வரைவது என்கிற கௌரவ பிரச்சனை, அங்கே உள்ள இரண்டு கட்சியினருக்கு இடையே அவ்வப்போது மோதலை ஏற்படுத்தி வருகிறது.

இதில் கலையரசன் தங்களது உரிமையை நிலைநாட்ட முயற்சிக்கிறார். இதனால் எதிர்தரப்பினர் அவரை கொலைசெய்ய முயற்சிக்க, அதை தடுக்க முயலும்போது எதிரணி தலைவரின் மகனை போட்டுத்தள்ளுகிறார் கார்த்தி.. ஆனால் கார்த்திக்கு பதிலாக கோர்ட்டில் சரண்டராகும் கலையரசனை கோர்ட்டில் வைத்து வெட்டி சாய்க்கின்றனர் எதிரிகள்.

நண்பனை கொன்றவர்களை பழிவாங்கவும் சுவரை மீட்டு இழந்த கௌரவத்தை திரும்ப பெறவும் வெகுண்டெழும் கார்த்தி, எப்போதும் தீப்பிடித்த மாதிரி உக்கிரமூர்த்தியாக மாறுகிறார். எதிரிகளும் கத்தியை தீட்டுகிறார்கள்.. ஜெயித்தது எதிரிகளின் கத்தியா, கார்த்தியின் புத்தியா என்பதற்கு விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.

காதல், காமெடி, கோபம், என நான் மகான் அல்ல கார்த்தியை இதில் மீண்டும் பார்க்க முடிகிறது. எதிரி பேசிக்கொண்டிருக்கும்போதே கார்த்தி அவரை போட்டுத்தள்ளும் காட்சி அப்ளாஸ் அள்ளுகிறது. கார்த்திக்கு அவர் இழந்த மகுடம் திரும்பவும் சூட்டப்பட்டு அதில் ஒரு மயிலிறகும் சொருகப்பட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்..

கார்த்திக்கு ஜோடியாக வீரப்பெண்மணியாக வரும் கேத்தரின் தெரசா ஏதோ ஒருவிதத்தில் உங்களை கவர்ந்துவிடுவார் என்பதே உண்மை. இருவருக்குமான காதல் காட்சிகளில் அத்தனை குறும்பு. படத்தில் கிட்டத்தட்ட இரண்டாவது கதாநாயகன் ரேஞ்சிற்கு அசால்ட்டன நடிப்பால் ‘கெத்து’ காட்டி தன்னை கவனிக்க வைத்திருக்கிறார் கலையரசன்.

படம் முழுவதும் வடசென்னை மக்களையே நடிக்கவைத்திருக்கிறார்களோ என்கிற அளவுக்கு படத்தில் நடித்த அனைவரின் நடிப்பிலும் படு யதார்த்தம். குறிப்பாக பைத்தியமாக வரும் ஜானி காட்சிக்கு காட்சி வரும்போதெல்லாம் கைதட்டல் அள்ளுகிறாரே..!

சந்தோஷ் நாராயணனின் இசையில் விடலைகளுக்கு இரண்டு கானாக்கள் தயார். வடசென்னைக்குள் உங்களை இரண்டரை மணிநேரம் வாழவைத்த உணர்வை தருகிறது முரளியின் நேர்த்தியான ஒளிப்பதிவு..

ஒரு சுவர் தானே என விட்டுவிடாமல், அதை மீட்பதில்தான் தங்கள் கௌரவம் ஒளிந்திருக்கிறது என நம்பும் மக்களை பார்ப்பது ஆச்சர்யமாக இருக்கிறது என்றாலும் அதுதான் பொட்டில் அடிக்கும் உண்மையும் கூட. அதை போரடிக்காமல் தெளிவாக, அதேசமயம் சுவராஸ்யமாக சொல்லி ரசிகர்களை தன வசப்படுத்தி வெற்றிக்கனியை கைப்பற்றியுள்ளார் இயக்குனர் ரஞ்சித்.