‘த்ரிஷ்யம்’ மோகன்லாலுக்கு தந்த வருத்தம்..!

நாட்டில் நடப்பதைத்தான் சினிமாவில் காட்டுகிறோம் என்கிறார்கள் நம் இயக்குனர்கள்.. ஆனால் சினிமாவைப் பார்த்துத்தான் குற்றவாளிகளாக பலர் உருவாகிறார்கள் என்கிறார்கள் போலீஸார்.
இதேபோன்றதொரு சர்ச்சையில் தான் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான மோகன்லால் நடித்த ‘த்ரிஷ்யம்’ படமும் அவ்வபோது சிக்கி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவில் நடந்த நிலாம்பூர் கொலைவழக்கில் கைதான இளைஞர்களை போலீஸார் விசாரித்தபோது ‘த்ரிஷ்யம்’ படம் தான் எங்களுக்கு கொலைசெய்யும் ஊக்கத்தை தந்தது என்று கூறியிருக்கிறார்கள்.

சமீபத்தில் கூட ஒரு சில கொலை வழக்குகளில் மாட்டிக்கொண்ட பலர் தாங்கள் செய்த குற்றங்களை த்ரிஷ்யம்’ பட பாணியில் மறைக்க முயற்சித்துள்ளனர். காரணம் ‘த்ரிஷ்யம்’ படத்தில் மோகன்லால் ஒரு கொலையை சாதுர்யமாக மறைக்க இப்படித்தான் முயற்சிகள் செய்வார்.

ஆக, தற்போதைய மாறிவரும் இளைய சமுதாயம் சினிமாவில் இருந்து நல்லவற்றை எடுத்துக்கொள்வதைவிட மோசமானவற்றைத்தான் முதலில் கவனிக்கிறது. இதுபோன்ற செய்திகளால் அவ்வப்போது சங்கடத்திற்கு ஆளாகும் மோகன்லால் சினிமாவை சினிமாவாகவே மட்டும் பாருங்கள் என மன வருத்தத்துடன் கூறியுள்ளார்.