“அமீர்கானை பார்த்துதான் எனக்கு தைரியம் வந்தது” – சித்தார்த்

‘ஜிகர்தண்டா’ படம் வெற்றிகரமாக ஓடும் சந்தோஷ களிப்பில் இருக்கிறார் சித்தார்த்.. திருச்சி, கோவை, மதுரை என ஊர் ஊராக ‘ஜிகர்தண்டா’ குழுவினருடன் வெற்றிப்பயணம் செய்து வரும் சித்தார்த் தனது மகிழ்ச்சியை நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பகிர்ந்துகொண்டார்..

‘ஜிகர்தண்டா’ படத்தில் உங்களை விட வில்லன் சிம்ஹாவுக்குத்தானே பிரமாதமான வாய்ப்பு.. இதற்கு நீங்கள் வருத்தமாக பீல் பண்ணுகிறீர்களா என பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு சித்தார்த், “இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது.. இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்தவுடனே இதில் என்னைவிட கைதட்டல் இன்னொருவருக்குத்தான் கிடைக்கப்போகிறது என்று தெரிந்துதானே இந்தக்கதையில் இறங்கினேன்.. அதனால் வருத்தமில்லை. மாறாக என் தம்பி சிம்ஹா, நான் அறிமுகப்படுத்தியவன்.. இன்றைக்கு அனைவரின் கைதட்டலையும் அள்ளுகிறான் என்பதை பார்க்கும்போது எனக்கு சந்தோஷமே..

இந்த பக்குவத்தை எனக்கு கொடுத்தது அமீர்கான் சார் தான். இந்தியில் ‘ரங்தே பசந்தி’ படத்தில் நடித்தபோது அமீர் சார், முக்கியத்துவமான கேரக்டரை ஒத்துக்கிவிட்டு. அதற்கு அடுத்த நிலையில் இருந்த கேரக்டரை தெரிந்தே அவருக்கு எடுத்துக்கொண்டார். முக்கியமான கேரக்டர் எனக்கு வந்து அதன் மூலம் எனக்கு கிடைத்த பாராட்டுக்கள் எல்லாம் நீங்கள் அறிந்ததுதான். அதுதான் இப்போது ஜிகர்தண்டாவில் எனது கேரக்டரை ஓகே செய்யும் பக்குவத்தை தந்திருக்கிறது” என விளக்கமும் கூறினார்.

அடுத்ததாக வசந்தபாலன் இயக்கத்தில் பிருத்விராஜூடன் இணைந்து நடித்துள்ள ‘காவியத்தலைவன்’ படம் வெளியாக இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் கன்னடத்தில் வெளியாகி கன்னட திரையுலகையே வியப்பில் ஆழ்த்திய ‘லூசியா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கிலும் ஹீரோவாக நடிக்கிறார் சித்தார்த். இனி தனது படங்கள் ஒரு குறிப்பிட்ட சீரான இடைவெளியில் வெளியாகும் என்கிறார் சித்தார்த் உறுதியாக.