சமாதானமானார் சமந்தா..! மன்னித்தார் மகேஷ்பாபு..!!

ஒரு ஹாட்டான பிளாஷ்பேக் படித்துவிட்டு அப்புறம் கரண்ட் மேட்டருக்கு வருவோமா..?

இந்த சமூக வலைதளங்களில் நடக்கும் கருத்துச்சண்டை இருக்கிறதே, அது பல நேரங்களில் குழாயடிச் சண்டையைவிட ரொம்பவும் மோசமானதாகவும் அதேசமயம் முட்டாள்தனமாகவும் இருக்கும். கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனது சமூக வலைதளத்தில் சமந்தா தெரிவித்த கருத்தையும் அதற்கு குவிந்த கண்டனங்களையும் பார்த்தால் அப்படித்தான் தெரிந்தது.

அப்படி என்ன சொல்லி விட்டார் சமந்தா.? ரொம்பவும் பிற்போக்குத்தனமாக இருக்கிறது என அப்போது மகேஷ்பாபு நடித்து ரிலீஸாகவிருந்த ‘1-நேனொக்கடினே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து கமெண்ட் தெரிவித்தார்.. அவ்வளவுதான் பொங்கி எழுந்த மகேஷ்பாபுவின் ரசிகர்கள், தங்களது கருத்துக்களை சமந்தாவுக்கு எதிராக பதிவு செய்ய ஆரம்பித்து விட்டனர்.

அப்போது நடிகர் சித்தார்த் வேறு இந்த நேரத்தில் சமந்தாவை காப்பாற்றுகிறேன் என இடையில் நுழைந்து “இன்னொருவரின் கருத்தில் இவ்வளவு தீவிரமாக தலையிடுவதை பார்க்கும்போது உங்களை தீவிரவாதியாகத்தான் நினைக்க தோன்றுகிறது” என்று சமந்தாவுக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என தேவையில்லாமல் கருத்துச்சொல்ல ஆரம்பித்தார்.

இதனால் கோபத்தின் உச்சிக்குப்போன ரசிகர்கள் அனைவரும், “சித்தார்த்.. சமந்தா கெட் லாஸ்ட்” என கருத்துக்களை பதிந்து தள்ளிவிட்டனர்.. ரசிகர்களின் கொந்தளிப்பை பார்த்ததும் அப்படியே பின்வாங்கிவிட்டார் சித்தார்த். ஆனால் சமந்தா குறித்து மகேஷ்பாபு எந்த எதிர் கருத்தும் சொல்லவில்லை. ஓகே..பிளாஸ்பேக் முடிந்தது.

இப்போது லேட்டஸ்டாக நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற பிலிம்பேர் விருது வழங்கும் விழாவுக்கு வந்திருந்தார் ஆந்திர இளவரசன் மகேஷ்பாபு. சிறிது நேரம் கழித்து விழாவுக்கு சமந்தாவும் வந்தார். வந்தவர் நேராக முன் வரிசையில் அமர்ந்திருந்த மகேஷ்பாபுவின் அருகில் சென்று அவரிடம் சிரித்துப்பேச ஆரம்பித்ததோடு, மகேஷ்பாபுவுக்கு அருகில் இருந்த இருக்கையிலேயே உட்கார்ந்தும் விட்டார். விழா முடியும் வரை அவ்வப்போது இருவரும் தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொள்வதும் சிரிப்பதுமாக உற்சாகமாகவே இருந்தனர்.

ஆறு மாதத்திற்கு முன் மகேஷ்பாபுவுடன் மல்லுக்கட்டிய சமந்தாவா இவர் என பலர் ஆச்சர்யப்பட்டுத்தான் போயினர். மகேஷ்பாபு நிறைகுடம்.. அவர் அப்போதும் இப்போதும் தளும்பாமல் தான் இருக்கிறார்… காரணம் அது சூப்பர்ஸ்டார்களுக்கே உரிய சிறப்பம்சம்.