அரிமாநம்பி – விமர்சனம்:

ஏ.ஆர்.முருகதாஸின் பள்ளியில் இருந்து வெளிவந்திருக்கும் மாணவர் ஆனந்த்ஷங்கர் இயக்கியுள்ள படம் தான் அரிமாநம்பி. முதல் படத்திலேயே தனது குருநாதரின் பெருமை காப்பாற்றி இருக்கிறாரா ஆனந்த்..?

பிரபல சேனல் அதிபர் ஒருவரின் மகளான பிரியா ஆனந்த்தை பார்த்ததுமே விக்ரம் பிரபு அவரை லவ் பண்ணுகிறார்.. ஆனால் பார்த்த இரண்டாவது நாளே விக்ரம் பிரபுவை தன வீட்டிற்கு அழைத்து செல்கிறார் பிரியா. அங்கே எதிர்பாராதவிதமாக பிரியா கடத்தப்பட, போலிசுக்கு ஓடுகிறார் விக்ரம் பிரபு. அங்கேயே கடத்தலுக்கு உதவியாக ஒரு போலீஸ் அதிகாரியே செயல்பட்டு இருப்பது தெரியவர, தனியே காதலியை தேடுகிறார்.

ஒருகட்டத்தில் பிரியாவையும் அவர் கடத்தலுக்கு காரணமான மெமரிகார்டு ஒன்றையும் கைப்பற்றுகிறார். அந்த மெமரிகார்டில் இருக்கும் வீடியோவில் மத்திய அமைச்சரான சக்கரவர்த்தி தனது காதலியை கொல்லும் காட்சி பதிவாகி இருக்கிறது. அடியாட்கள் மற்றும் போலீஸ் நெட்வொர்க்குடன் விக்ரம் பிரபுவையும் பிரியாவையும் சக்கரவர்த்தி நெருங்க, தனி ஆளாய் விக்ரம் பிரபு அவரை எப்படி சட்டத்தின் முன் சிக்கவைக்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறவேண்டிய அளவுக்கு விறுவிறுப்பான கதை கிடைத்தால் விடுவாரா விக்ரம் பிரபு. துரத்தல், துப்பாக்கி என புகுந்து விளையாடி இருக்கிறார். இரண்டுநாள் மட்டுமே பழகிய பெண்ணிற்காக அவர் எதிரிகளுடன் மோதும்போது காதலின் ஆழத்தையும் சமூக பொறுப்பையை ஒருசேர பிரதிபலிக்கிறார்.

படத்தைப் பொறுத்தவரை பிரியா ஆனந்த் ஒரு கதாநாயகி.. அவ்வளவுதான். பாவம்.. அந்தமுகத்தில் எந்த உணர்வையும் அவரால் பிரதிபலிக்க முடியவில்லை.. வில்லத்தனமான அமைச்சரான சக்கரவர்த்தியை அடிதடி சண்டை என்று இல்லாமல் இருந்த இடத்திலேயே வில்லத்தனம் காட்டவைத்திருக்கிறார்கள்.

படத்தில் நாம் எதிர்பாராதவிதமாக அமைந்திருக்கும் கேரக்டர், போலீஸ் அதிகாரியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் தான்.. காமெடி இல்லாத சீரியாசான இந்த கேரக்டர் அவருக்கே புதிதாகத்தான் இருந்திருக்கும். வருவது பத்து நிமிடம் என்றாலும் ஆடியன்ஸின் கைதட்டலை அள்ளுகிறார் பாஸ்கர்.

வில்லனின் கையாளாக வரும் அருள்தாஸ், அமைச்சரின் காதலியாக வந்து பரிதாப மரணத்தை தழுவும் லேகா வாஷிங்டன் என இருவரும் நம் கவனம் ஈர்க்கிறார்கள். படத்தில் விக்ரம் பிரபு கட்டடங்களுக்கு இடையே தாவும் காட்சிகளில் சாகசம் செய்திருக்கிறது ஆர்.டி.ராஜசேகரின் கேமரா.. ஆனால் இந்த விறுவிறுப்பான வேகத்தில் அறிமுக இசையமைப்பாளரான ட்ரம்ஸ் சிவமணியின் பாடல்கள் எடுபடவில்லை என்பது சோகம்.

மந்திரியை சாதாரண இளைஞா எதிர்க்கும் வழக்கமான ஆக்ஷன் கதைக்கு இன்றைய லேட்டஸ்ட் டெக்னாலஜியை வைத்து விறுவிறுப்பு காட்டியிருக்கிறார் ஆனந்த் ஷங்கர். அது ரசிகர்களை ரெண்டு மணி நேரம் சீட் நுனிக்கு கொண்டுவந்து உட்கார வைத்திருப்பதிலேயே அவரின் வெற்றி உறுதி ஆகியிருக்கிறது.

மந்திரியின் கையாளாக சில போலீஸ் அதிகாரிகள் இயங்குவது சரி.. ஆனால் மந்திரி சொன்னார் என்பதற்காக ஒரு அப்பாவியை குற்றவாளியாய் சித்தரிப்பதும் அதேவேகத்தில் மொத்த போலீசும் அவரை தேடுவதும் என தமிழ்சினிமாவில் இன்னுமா அரசியல் ஆதிக்கம் அந்த அளவுக்கு ஊடுருவி இருக்கிறது. அதே மந்திரி தான் தான் கொலை செய்தேன் என கொக்கரிக்கும்போது கூட சுற்றிநிற்கும் நூறு அதிகாரிகளும் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அவருக்கு உதவுவதிலேயே குறிக்கோளாக இருப்பதும் கதை தான் என்றாலும் மனதை உறுத்தும் ஒரே விஷயம்..