வெற்றிசெல்வன் – விமர்சனம்

013

பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்த ருத்ரன் இயக்கியிருக்கும் முதல் படம் ‘வெற்றிசெல்வன்’. அஞ்சாதே, கோ படங்களில் பிரமாதமாக நடித்து பாராட்டை பெற்ற அஜ்மல் நாயகனாக நடிக்க, ‘தோனி’ படத்தின் நாயகி ராதிகா ஆப்தே நாயகியாக நடித்துள்ளார். மனநல மருத்துவமனையில் நடைபெறும் முறைகேடுகளையும், அங்கு நடைபெறும் அதிர்ச்சியான விஷயங்களையும் கொஞ்சம் கமெர்சியலாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ருத்ரன்.

படத்தின் கதைப்படி, அஜ்மல், பாடகர் மனோ, செஃரிப் மூன்று பெரும் புதிய இடத்துக்கு வருகிறார்கள். அங்கு வேலை செய்யும்போது ராதிகா ஆப்தேவை சந்தித்து, அஜ்மலுக்கும், ராதிகாவுக்கும் காதல் உருவாகிறது. ஒருபுறம் இவர்களை போலிஸ் துரத்த, அதில் செஃரிப் இறந்து விடுகிறார். அஜ்மல், மனோ சிறைக்கு செல்கிறார்கள். அவர்கள் கொலையாளிகள் என தெரிந்து உங்களை வெளியே கொண்டுவர என்னிடம் உண்மை சொன்னால் தான் முடியும் என வக்கீலான நாயகி ராதிகா ஆப்தே கூற, ஃபிளாஷ்பேக்.

மனநலம் சரியான பிறகும், மருத்துவமனையிலேயே அங்கு இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். அப்போது அங்கு நடக்கும் சில தவறான விஷயங்கள் தெரியவர, அப்போது நடக்கும் சம்பவங்களால், செய்யாத ஒரு கொலைப்பழியுடன் போலீசிடம் இருந்து மறைந்து வாழ்கிறார்கள். வெளியே வந்தார்களா? மனநல மருத்துவமனையில் இருந்தவர்களின் நிலை என்னவானது? என்பதே மீதிக்கதை.

அஞ்சாதே, கோ படங்களில் பார்த்த அஜ்மல் இந்த படத்தில் ஒருபடி கீழே இறங்கிதான் நிற்கிறார். மனநிலை சரியாக இருக்கிறாரா? இல்லையா? என்று நிறைய இடங்களில் குழப்பம் ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம்.

நாயகியாக ராதிகா ஆப்தே. வக்கீல் என்பதாலேயே என்னவோ அம்மா, தங்கை, ராதிகா என குடும்பமே வழ வழவென பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இதில் இவருக்கு ஓபனிங் சாங் வேறு. கிளைமாக்ஸ் காட்சியை தவிர மற்ற இடங்களில் நடிக்க வாய்ப்பு இல்லை.

மனோ, செஃரிப், தலைவாசல் விஜய், அழகம் பெருமாள், தினேஷ் லம்பா ஆகியோரும் நடித்துள்ளனர். இரண்டாவது பாதியில் வரும் தலைவாசல் விஜய், அழகம் பெருமாள், தினேஷ் லம்பா சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தை கொஞ்சம் தாங்கி பிடித்திருக்கின்றன. கஞ்சா கருப்பு, சஞ்சனா சிங் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் அறுவையோ அறுவை.

லோகநாதன் மற்றும் ரமேஷ் ஒளிப்பதிவில் மலைப்பிரதேசமும், மனநல மருத்துவமனையும் சிறப்பாக காட்டப்பட்டுள்ளன. மணிஷர்மாவின் இசையில் விட்டு விட்டு தூறும் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை சுமார்.

நல்ல ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்துள்ள இயக்குனர் ருத்ரன், அதனை தொய்வான திரைக்கதையாலும், தேவையில்லாத காட்சிகளாலும் வீணடித்து விட்டார் என்றே சொல்லலாம்.