கலைபுலி தாணு’வின் “அரிமா நம்பி” விக்ரம் பிரபுவிற்கு ஏற்றமாக அமையுமா?

“வி கிரியேஷன்ஸ்” சார்பாக கலைபுலி எஸ். தாணு தயாரித்திருக்கும் திரைப்படம் “அரிமா நம்பி”. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடித்த “துப்பாக்கி” திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் ஷங்கர் இப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார். கும்கி’யில் அறிமுகமான விக்ரம் பிரபு கதாநாயகனாகவும், பிரியா ஆனந்த கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இதுநாள்வரை மாபெரும் இசைக்கலைஞர்களின் இசைக்கு ட்ரம்ஸ் அடித்து அசத்திய ட்ரம்ஸ் சிவமணி இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் ஒளிஒவியத்தை ஆர்.டி.ராஜசேகர் கையாண்டுள்ளார்.

இத்திரைப்படம் முற்றிலும் முடிவடைந்து தனிக்கைக்காக காத்துக்கொண்டிருக்கிறது. ஜூன் 15, 2014 அன்று சென்னையில் உள்ள “4 பிரேம்ஸ்” ப்ரிவியு திரையரங்கில் முக்கியமான ஆறு விநியோகஸ்தர்களுக்கு “அரிமா நம்பி” திரைப்படம் போட்டு காண்பிக்கப்பட்டது. படம் பார்த்த விநியோகஸ்தர்கள் படம் சூப்பர் என கூறுகின்றனர். இந்த பாராட்டை கேட்ட கலைபுலி தாணு மிகவும் நெகிழ்ந்துள்ளார். படத்தில் எந்த வித ஆபாசமும் இல்லை, குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம் “அரிமா நம்பி” என படம் பார்த்த விநியோகஸ்தர்கள் சொல்கிறார்கள். “அரிமா நம்பி” சுமார் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் படம் என சொல்லப்படுகிறது.

இத்திரைப்படத்தின் தணிக்கை திட்டமிட்ட தேதிக்குள் முடிவடைந்துவிட்டால், படத்தை ஜூலை 07, 2014 அன்று வெளியிட தயாரிப்பு நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ஆனந்த ஷங்கரின் இயக்கம் மற்றும் விக்ரம் பிரபுவின் நடிப்பு, திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு லாபம் ஈட்டும் என படம் பார்த்த விநியோகஸ்தர்கள் பேசிக்கொள்கிறார்கள். அறிமுக இயக்குனர் ஆனந்த ஷங்கர் மற்றும் கதாநாயகன் விக்ரம் பிரபுவிற்கு “அரிமா நம்பி” ஒரு ஏற்றமாக அமையுமா? என்பது படம் வெளியான பிறகே தெரியும்.