மே 18 – ல் சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெற அனுமதிக்கக்கூடாது – தமிழ் தேசிய கூட்டமைப்பு காவல்துறையில் புகார்:

இன்று காலை சென்னையில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு ..

2009 மே 18ம் நாளில் நடந்த மாபெரும் தமிழினப்படுகொலைக்குப் பின் போரை நிறுத்தியது இலங்கை அரசு. இந்த நாள் தமிழர்களின் கறுப்பு தினமாக உலகத் தமிழர்களால் கருதப்படுகிறது.

இந்த நாளை இலங்கை அரசு தமிழர்களை கொன்று வெற்றி வாகை சூடிய நாளாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடுகிறது. ஆனால் தமிழர்கள் இந்த நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக ஆண்டுதோறும் அனுசரித்து வருகிறார்கள் . அமெரிக்க , ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மே 18 ஆம் நாளில் மாபெரும் நினைவேந்தல் நிகழ்சிகளை நடத்துகின்றனர் . தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் சுடரேந்தி தமிழின உணர்வாளர்கள், போரில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த நாளில் கேளிக்கை , விளையாட்டுகள் , களியாட்டங்கள் முதலியவற்றை தவிர்த்து வருகின்றனர். தமிழகத்திலும் இந்த இனப்படுகொலை துக்க நாளை தமிழக மக்கள் நினைவு கூர்தல் அவசியமாகும். இந்த மே 18 ஆம் நாள் தமிழர் நெஞ்சங்களில் ஆறாத ரணமாக பதிவாகி உள்ளது என்றால் அது மிகையல்ல.

இந்த நாளில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது தமிழர்களின் உணர்வை புண்படுத்துவதாக அமைந்து விடும் . கிரிக்கெட் வாரியம் தமிழர்களின் கோபத்திற்கும் ஆளாகும். அதனால் வருகிற மே 18 இல் சென்னையில் நடக்கவுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடக்க அனுமதிக்கக் கூடாது என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனு கொடுத்துள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் தெரிவித்துள்ளார் .

இந்தப் போட்டியை வேறு ஏதாவது ஒரு நாளில் ஐ.பி.எல் நிர்வாகம் வைத்துக் கொள்ளட்டும் ஆனால் இந்த நாளில் வேண்டாம் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம் . ஒருவேளை ஐ.பி.எல் நிர்வாகம் இதே நாளில் கிரிக்கெட் போட்டியை நடத்தினால் தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் மாணவர்கள் இந்த கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் செய்வார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசும் இந்த நாளில் கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடக்க அனுமதிக் கூடாது என்றும் உலகத் தமிழர்கள் சார்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.