NITTTR’ன் பொன்விழா கொண்டாட்டம்…

1964ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட NITTTR எனும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்  மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சுயாட்சி நிறுவனமாகும். தென்னிந்திய தொழில்நுட்ப கல்லூரிகளின் திறனை மேம்படுத்த, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், இப்போது பல துறைகளை கொண்டு இயங்கி வருகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடக, தெலுங்கானா & பாண்டியை சேர்ந்த தொழில் நுட்ப நிறுவன ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டை செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்நிறுவனம் ஹைதராபாத், பெங்களூரு, கலாமாசேரி & விஜயவாடா போன்ற நகரங்களிலும் இயங்கி வருகிறது. 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள இந்த நிறுவனத்தின் பொன் விழா கொண்டாட்டம் வெகு விமரிசையாக சென்னையில் நடைபெற்றது.

விழாவில் முக்கிய விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைக்க, விழா மலர் வெளியிடப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் பணி புரிந்த இயக்குனர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், மற்ற பணியாளர்கள் ஆகியோரை டாக்டர் அல்லம் அப்பாராவ் மற்றும் டாக்டர் சுதீந்திரநாத் பண்டா ஆகியோர் கவுரவித்தனர்.

விழாவில் துவக்கத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் பெயரில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடத்தை டாக்டர் அல்லம் அப்பாராவ் திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய சேர்மன் டாக்டர் சுதீந்திரநாத் பண்டா, இந்நிறுவனத்தின் தூண்களாக விளங்கியவர்களை பற்றியும், நிறுவனத்தின் பெருமைகளையும் பட்டியலிட்டார். அவர் கூறும்போது, “தொழில்நுட்ப முறையில் ஆசிரியர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தொழில்நுட்ப ரீதியில் சிறப்பான ஆசிரியர்கள் உருவாக்கியிருக்கிறோம். உலகம் முழுவதில் இருந்தும் ஆண்டுக்கு 250 பேர் வீதம் இங்கு வந்து பயிற்சி பெறுகிறார்கள். அவர்களுக்கு தங்கும் வசதிகள் உட்பட சகல வசதிகளையும் செய்து தருகிறது இந்நிறுவனம். 532க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பாடங்களை (Educational Films) வீடியோவாக தயாரித்து வெளியிடப்பட்டிருக்கிறது. IIT, NIT, Anna University உட்பட பெருமைமிகு நிறுவனங்களுக்கும் மற்றும் இதர தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கும் (Faculty Development Course) ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களான TNEB, TNSCB, CPWD, PWD ஆகிய நிறுவனங்களுக்கு ஆலோசனை & திட்டங்களை வழங்கி வருகிறது” என்றார்.

இவ்விழாவில் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் அல்லம் அப்பாராவ், முன்னாள் முதல்வர் நாராயண ராவ், முன்னாள் இயக்குனர் ஜெய்பிரகாஷ் நாராயண், பேராசிரியர் சைனி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Tags:

Leave a Response