குமரி மாவட்டத்தில் 400 மீனவர்களைக் காணவில்லை: மாவட்ட நிர்வாகம் ஒப்புதல்!

ஒகி புயலால், கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 400 மீனவர்களைக் காணவில்லை என்றும் தொடர்ந்து தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குமரி மாவட்ட நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.

குமரி மாவட்டத்தில் ஒகி புயலின் காரணமாக ஏராளமான மீனவர்களைக் காணவில்லை என மீனவ மக்கள் புலம்பித் தவித்து வருகிறார்கள். சொற்ப எண்ணிக்கையிலான மீனவர்களை மட்டுமே காணவில்லை என அரசு சார்பாக கடந்த சில தினங்களாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்த குமரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

1b8ab2575d5899a60c88519eea7c05c8

அதன்படி, இறைவின்புதூர்துறை, சின்னதுறை, தூத்தூர், பூத்துறை, இறைவியன்துறை உள்ளிட்ட மீனவக் கிராமங்களில் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணிகளை குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் நேரில் ஆய்வுசெய்தார். பின்னர் பேசிய அவர், ”குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்டு கரைதிரும்பாத மீனவர்களைக் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

வருவாய்த்துறை, மீன்வளத்துறை அலுவலர்கள் கடற்கரை கிராமங்களில் இந்தப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுவருகிறார்கள். ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் சென்று, ஒகி புயலுக்குப் பின்னர் கரை திரும்பாத மீனவர்கள்குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், காணாமல்போன மீனவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புயலினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை முதல்வர் அறிவித்து இருக்கிறார். அந்த நிவாரண உதவிகள் மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, 13 வல்லங்களில் மீன்பிடிக்கச் சென்ற 35 மீனவர்களும், 34 விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற 365 மீனவர்களும் இதுவரை கரைதிரும்பவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. இந்த 400 மீனவர்களையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அனைத்து மீனவர்களும் கிடைக்கும் வரை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறும். கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a Response