ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – விமர்சனம்!

Onayum-Aatukuttiyum-Movie-Online-Review-600x340

கதையை நம்பி மட்டுமே படத்தை எடுத்துள்ளோம் என்று சிலர் போகிறபோக்கில் வாயால் மட்டுமே சொல்லிவிட்டு போவதுண்டு. ஆனால் இந்த வார்த்தையை இந்த ஒரு இயக்குனர் சொல்லவில்லை. படத்தை பார்த்த பின் ஒவ்வொரு ரசிகனும் உண்மையாகவே அதனை உணர முடிகிறது. அந்த ஒரு இயக்குனர் மிஷ்கின். கதையை நம்பி எடுக்கப்பட்ட அந்த படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.

சொல்லபோனால் படத்தில் ஒரு பாடல் காட்சி இல்லை, நாயகி இல்லை, குத்துப்பாட்டு இல்லை, இவ்வளவு ஏன் தெரிந்த பிரபல முகங்கள் கூட இல்லை. முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள இரண்டே இரண்டு முகங்கள். அந்த முகங்கள் கூட ஒரே ஒரு படத்தில் நடித்த முகங்கள். இப்படி இருக்கும்பட்சத்தில் நம்பிக்கையை மட்டும் வைத்துகொண்டு, ஒரு படத்தை பார்க்கும் அளவுக்கு கொடுக்க முடியும் என்பது இயக்குனரின் திறமையை காட்டுகிறது. இத்தனைக்கும் படத்தின் தயாரிப்பாளரும் அவரே தான்.

படத்தின் கதையை பற்றி கூறுவதை விட அவற்றை நீங்கள் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதை விட படத்தில் உள்ள நிறைய சிறப்புக்களை பட்டியலிடலாம்.

முதலில் படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும் புதுமுகங்கள். அவர்களை செம்மையாக பயன்படுத்தியது இயக்குனரின் திறமை. போலீஸ் அதிகாரிகளாக நடித்திருக்கும் நபர்கள், பாரதி சித்தி, வில்லன் ஆதித்யா மேனன், ஸ்ரீயின் HOD ஆகியோரை பார்த்த இடங்களிலேயே ஒப்பந்தம் செய்து நடிக்க அழைத்து வந்துள்ளார் மிஷ்கின்.

அடுத்து அந்த பார்வையற்ற குடும்பத்தினாரக வரும் அப்பா, அம்மா, சிறுமி ஆகியோரின் அசாத்தியமான நடிப்பு மற்றும் பார்த்தவுடனே அவர்களின் கதாபாத்திரங்களுடன் நாம் ஒட்டிகொள்வது இயல்பு. மேலும் அவர்களின் முடிவு கண்ணீரை வரவழைக்ககூடியது.

அடுத்து நாயகன் ஸ்ரீ. முதல் காட்சியிலிருந்து பயந்த, அதே சமயம் ஒரு நல்ல நோக்கத்தோடு செயல்படும் கதாபாத்திரம். நேர்த்தியாக செய்திருக்கிறார். அடுத்து ஓநாய் மிஷ்கின். அதிகம் பேசாமல் மௌன மொழிகளிலேயே தனது கருத்துக்களை சொல்லி விட்டு போகிறார்.

திரைப்படம் என்பது காட்சிகளின் ஊடகம் என்பதை இந்த படத்தில் அதிகமாகவே சொல்கிறார் மிஷ்கின். தேவையில்லாத வசனங்கள் இன்றி காட்சிகளின் மூலமே கருத்துக்களை சொல்வது அதிகம் பாராட்டகூடியது.

முழுப்படமுமே இரவில் நடக்கிறது. இதனை படமாக்கிய விதமும், இளையராஜாவின் முன்னணி இசையும் பக்க பலம். படத்திற்கு கொஞ்சம் கூட விளம்பரம் தேவையில்லை என இயக்குனர் சொன்னதற்கான காரணங்கள் இப்போதுதான் தெளிவாகின்றன.

மேலும் படத்தில் வரவேண்டிய ஒரு முக்கிய பிளாஷ்பேக் காட்சியை அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. அதே போல படத்தை ஆரம்பம் முதல் கணிக்க முடியாதவாறு திரைக்கதையை நகர்த்தியிருப்பதும் மிஷ்கின் முத்திரைகள். படத்தின் முடிவில் திரைக்கலைஞர்களுக்கு கொடுத்திருக்கும் டைட்டில் கிரெடிட் புதுசு.

முகமூடி படத்தில் கிடைத்த அத்தனை விமர்சனங்களுக்கும், இந்த படத்தின் மூலம் பதில் சொல்லியிருக்கிறார் மிஷ்கின்.