பள்ளிக்கூடத்தை கட் அடிச்சுட்டு பார்த்த படம் ‘நினைத்தாலே இனிக்கும்’ – அமீர்!

Ninaithale Inikkum Trailer Launch Stills (49)

1979-ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடித்த கடைசி படம் “நினைத்தாலே இனிக்கும்”. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளிவந்த இந்தத் திரைப்படம், 34 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் வெளிவருகிறது. ராஜ் டிவி இந்தப் படத்தை வெளியிடுகிறது. இதற்காக கிட்டத்தட்ட 1 மாதத்துக்கும் மேல் புதுப்புது டிசைன்களில் தினமும் விளம்பரங்களை வெளியிட்டு வந்தது ராஜ் டிவி.

டிஜிட்டல் பதிப்பின் டிரைலர் சென்னையில் வெளியிடப்பட்டது. கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், கமல்ஹாஸன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய டிரெய்லர் பற்றி பேசினார்கள். ரஜினிகாந்த் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இந்த விழாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு மரியாதையை செய்யப்பட்டது.

விழாவில், அமீர் பேசும்போது, “இந்த விழாவுக்கு நான் உலகநாயகன் கமலஹாசனின் ரசிகனாக வந்துள்ளேன். பார்க்க சுவாரஸ்யமானது என்பதற்கு இந்த விழா ஒரு முக்கியமான உதாரணம். நான் கண்டிப்பான குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய அப்பா 1977-ஆம் ஆண்டு இறந்து விட்டார். முஸ்லீம் சமுதாயத்தில் பிறந்ததால் என்னுடைய அம்மா வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்.

அதனால், அப்பாவின் மரணத்திற்கு பிறகு நான் சுதந்திரமானவன் ஆகிவிட்டேன். அப்படியொரு நாள் பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டு பார்த்த படம்தான் ‘நினைத்தாலே இனிக்கும்’. நான் உலகநாயகனின் ரசிகன் என்று சொல்வதைவிட வெறியன் என்றுதான் சொல்லவேண்டும். அவருடைய சினிமாக்களைப் பார்த்துதான் நான் சினிமாவைக் கற்றுக்கொண்டேன் என்று சொன்னால் அது மிகையாகாது.

நான் ‘பிறவிக் கலைஞன் கமல்ஹாசன்’ என்ற பெயரில் நற்பணி மன்றம் ஒன்றையும் தொடங்கினேன். அவரை நிறைய முறை நேரில் சென்று பார்க்க என்னுடைய நண்பர்கள் அழைத்தாலும், அவரை தூரத்தில் நின்றே ரசிக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் என் மனதில் இருந்தது. அவருடன் சேர்ந்து பல இடங்களில் போட்டோ எடுத்திருந்தாலும், அவருடைய ரசிகனாக, என் மேல் அவர் கை போட்டு எடுத்த போட்டோ இதுவரை ஒன்றுகூட என்னிடம் இல்லை என்பதுதான் உண்மை.

இந்த படத்தில் பாலச்சந்தர் அவர்களின் திரைக்கதை ரொம்பவும் அருமையானது. எல்லா காலகட்டத்திலும் பார்க்கக்கூடிய படம் இது. ரசிக்கக்கூடிய இசை இப்படத்தில் உள்ளது. 300 வருடங்கள் கடந்தாலும், சினிமா என்று ஒன்று இருக்கும்வரை பாலச்சந்தர் அவர்களுடைய சாதனையை யாராலும் தொடமுடியாது என்பது மறுக்க முடியாத உண்மை, என்றார்.