நண்பர்கள் தான் வாழ்க்கை என்பவனின் வாழ்வில் வரும் காதல்!

001 (2)

அவதார் மூவீஸ் ஆர்.செல்வி, தாருன் கிரியேசன்ஸ் ஞானதேஸ் அம்பேத்கார் இருவரும் இணைத்து தயாரிக்கும் படம் ‘’அழகு மகன்‘’. இந்த படத்தில் உதய் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மாளவிகா வேல்ஸ் நடிக்கிறார் மற்றும் ஜி.எம்.குமார், பவன் ராஜ்கபூர், இளவரசு, சிந்தியா, கோபால், விஜி, சிங்கம் புலி, நிதிஷ் விசித்திரன், வைரவன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – அக்கு அஜ்மல். இசை – ஜேம்ஸ்வசந்தன். பாடல்கள் – தாமரை, யுகபாரதி, மோகன்ராஜ். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அழகன் செல்வா. இவர் சின்னத்திரை, வண்ணத்திரை இயக்குனர்கள் பலரிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம். இது தெக்கத்தி மக்களின் வாழ்க்கை, கலாச்சாரப் பதிவு என்று சொல்லலாம்.

பெத்தவங்களின் உணர்வை புரிந்து கொள்ளாமல் நண்பர்கள் தான் வாழ்க்கை என்று வாழும் உதய்யின் வாழ்க்கையிலும் காதல் வருகிறது. காதலா? நட்பா? என்று முடிவெடுக்க வேண்டிய நிலை வரும்பொழுது காதலை விட  நட்பு தான் மேலானது என்று முடிவெடுக்கிறான். ஒரு கட்டத்தில்  நட்பும், காதலும் தேவை என்று வரும் பொழுது அவனது முடிவு என்ன என்பதை திரைக்கதையாக்கி இருகிறேன்.

படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை அகமலை, புலிக்குகை போன்ற இடங்களில் படமாக்கினோம். பிதாமகன், பரதேசி போன்ற பாலாவின் படங்கள் படமாக்கப்பட்ட  இடங்கள் மற்றும் அதற்கு மேல் மிக உயரமான இடங்களில் சிரமப்பட்டு படப்பிடிப்பை  நடத்தினோம். இதற்காக வாகன வசதி இல்லாத இடங்களுக்கு போய் சேர காலாற நடந்தே 10 கிலோ மீட்டர் வரை போய் படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். சிரமப்பட்டதற்கு பலன் திரையில் பார்க்கும் போது தெரிகிறது என்கிறார் இயக்குனர் அழகன் செல்வா.