அம்பிகாபதி – விமர்சனம்!

ambikaa

தமிழ் படங்களில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என நிரூபித்த தனுஷ், இந்தியில் நடித்துள்ள முதல் படம். இந்தியில் ரஜினி, கமலுக்கு பிறகு எந்த ஒரு தென்னிந்திய நடிகரும் நிலைத்ததில்லை. ஓரிரண்டு படங்களில் ஆசைக்கு நடித்துவிட்டு வருவார்கள். இதில் எந்த பட்டியலில் தனுஷ் சேரப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் வெளியாகியுள்ளது ராஞ்ச்னா. இந்த படத்தின் தமிழ் பதிப்பு தான் இந்த “அம்பிகாபதி”.

உத்தரபிரதேச மாநிலம் காசி தான் கதையின் களம். கோவில் புரோகிதரின் மகன் தனுஷ் இந்து, கல்லூரி பேராசிரியரின் மகள் சோனம் கபூர் முஸ்லிம். தொழுகையில் இருந்த சிறுவயது சோனம் கபூரை பார்த்த சிறுவயது தனுஷுக்கு சோனம் கபூர் மீது ஒருவிதமான ஈர்ப்பு. பள்ளிப்பருவத்தில் இருவரும் காதலிக்க வீட்டில் தெரிந்து படிப்பதற்காக சோனம் கபூரை ஆக்ராவுக்கு அனுப்புகிறார்கள்.

பின்னர் எட்டு ஆண்டுகள் கழித்து வரும் சோனம் கபூருக்கு தனுசை அடையலாம் தெரியாத நிலை. பேசிய பின் தனுஷ் மீது சோனம் கபூருக்கு காதல் இல்லை என்பது தெரியவருகிறது. படிக்க போன இடத்தில் அபய் தியோலை காதலிக்கிறார். அவரை தன்னுடன் சேர்த்து வைக்க தனுசை பயன்படுத்துகிறார். தனுஷ் உதவியால் கல்யாணம் வரை போகிறது சோனம் கபூர் காதல்.

இந்த நிலையில் அவரது காதலன் முஸ்லீம் அல்ல என தெரிய வர சோனம் உறவினர்கள் அவரை அடித்து போட்டு விடுகின்றனர். திருமணம் நின்று விடுகிறது. இதன் பின் தனுஷ் காதல் என்னவாயிற்று? அபய் தியோல், சோனம் கபூர் காதல் என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.

விக்ரம், சூர்யா, ராணா டக்குபதி, ப்ரித்விராஜ் போன்ற உடல் வாகுள்ள தென்னிந்திய நடிகர்களுக்கு பாலிவுட்டில் கிடைக்காத மிகப்பெரிய அறிமுகம் தனுஷிற்கு கிடைத்தள்ளது. நேர்த்தியான கதைக்களம், தனது அசாத்தியமான நடிப்பு ஆகியவற்றால் பாலிவுட்டில் நிரந்தர இடத்தை தனுஷ் பிடித்துள்ளார் என்றால் அது மிகையல்ல. ஒவ்வொரு காட்சியிலும் தேர்ந்த நடிப்பு, காதலுக்காக எதையும் செய்யும் அவரது கேரக்டரின் ஆழம் என சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் தனுஷ்.

ஒரு சிக்கலான கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளார் சோனம் கபூர். இவர் காதல் செய்வது மட்டுமல்லாமல் அரசியல் மீதும் பற்று கொண்டவராகவும், தனது சுயநலத்துக்காக தன்னை காதலிக்கும் தனுசை பயன்படுத்தும் கேரக்டரில் முத்திரை பதித்திருக்கிறார். பள்ளி மாணவி, கல்லூரி மாணவி, சமூக சேவகி என அத்தனை நிலைகளிலும் சோனம் கபூர் ஸ்கோர் செய்கிறார்.

வித்தியாசமான கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடிக்கும் அபய் தியோல் இந்த படத்திலும் சிறப்பாகவே நடித்துள்ளார். ஆனால் ரொம்ப நேரம் நீடிக்காத கேரக்டர். தனுஷுடன் வளர்ந்து, ஒரு தலையாக காதலிக்கும் ஸ்வரா பாஸ்கர் அழகு, அதே நேரத்தில் ரசிகர்களை ஈர்க்கிறார். இவர் காதலாவது வெற்றிபெறக் கூடாதா என ஏங்க வைக்கிறார். தனுஷின் நண்பனாக நடித்துள்ள அயுப் கச்சிதம்.

படத்தின் முதுகெலும்பு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. தொடக்கம் முதலே பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டும் அனைத்திலும் மனிதர் கட்டிபோட்டு விடுகிறார். காசி, டெல்லி, பஞ்சாப் என இடத்துக்கு தகுந்தாற்போல இசையை கொடுத்து அந்தந்த இடங்களுக்கே ரசிகர்களை கூட்டி செல்கிறார் இசைப்புயல்.

நட்ராஜ் ஒளிப்பதிவில் அம்பிகாபதி டைட்டில் பாடலில் வண்ணகலவையையும், காசியின் சந்துபொந்துகளையும் அழகாக படம் பிடித்துள்ளார்.

படம் முதல் பாதி முழுவதும் காதல், இசை என சந்தோஷமாக பயணிக்கிறது. இரண்டாம் பாதியில் ஆரம்பம் முதலே சோகமாக ஆரம்பித்து கடைசி வரை நீடிக்கிறது. காதல் குறைந்து அரசியல் அதிகமாக இருக்கிறது. ஆனாலும் அழகான காட்சியமைப்புகளாலும், தேர்ந்த வசனங்களாலும் படத்தை செதுக்கியுள்ளார் இயக்குனர் ஆனந்த் எல்.ராய்.