ஓடிப்போய் படத்தோடு வந்து நின்ற என் உதவி இயக்குனர் – எஸ்.எஸ்.குமரன் பெருமிதம்!

vu audio

குறும்படங்கள் செய்து தங்கள் தவறுகளை திருத்தி கொண்டு அதிரடியாக சினிமாவிற்குள் நுழையும் இளம் இயக்குனர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த வரிசையில் வஞ்சம், டாட், நா ஒரு பொண்ண லவ் பண்ண போறேன் போன்ற குறும்படங்களை இயக்கிய ஆஷிக் என்ற புதுமுக இயக்குனர் “உ” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடிக்க, அவருடன் நான்கு இளம் நடிகர்கள் நடிக்கிறார்கள். சூப்பர் சிங்கர் ஆஜித் ஒரு பாடல் பாடி, நடித்தும் இருக்கிறார்.

இந்த படத்தில் இந்திய சினிமா 100 ஆண்டு நிறைவை போற்ற ஒரு பாடல் உருவாகப்பட்டுள்ளது. இந்த பாடல் உட்பட அனைத்து பாடல்களையும் முருகன் மந்திரம் எழுதியுள்ளார். அபிஜித் ராமசாமி இசையமைத்துள்ளார்.

இந்த உ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் கலந்து கொண்டு இசையை வெளியிட, தயாரிப்பாளர் சங்க செயலாளர் பி.எல்.தேனப்பன் இசைத்தட்டினை பெற்றுகொண்டார். தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

விழாவில் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் பேசும்போது, “இயக்குனர் ஆஷிக் என்னிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர். என்னுடைய படத்திற்கு லொகேஷன் பார்ப்பதற்காக கேரளா சென்றபோது பாதியில் இவரை காணாமல் தேடி அலைந்தேன். கடைசியில் சென்னையில் என்னை வந்து சந்தித்த ஆஷிக், “சார் ஒரு படம் பண்ணிருக்கேன்” என்றான்.

என்னிடமிருந்து ஓடி போய் தனியாக ஒரு படத்தை எடுத்து இருக்கிறார் ஆஷிக். நல்ல விஷயம் தான். இன்னொன்று என்னிடம் இருந்த அத்தனை நடிகர்கள் மற்றும் உதவி இயக்குனர்களையும் தன்னோடு கூடிக்கொண்டு போய்விட்டான் ஆஷிக். நான் ஆள் தேடி அலைய வேண்டியதாகிவிட்டது. இந்த படம் நிச்சயம் வெற்றி பெரும்” என்றார்.