“நம்மை யாராலும் பிரிக்க முடியாது” – ரசிகர்களுக்கு அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த்..!

தன்னையும், ரசிகர்களையும் யாராலும் பிரிக்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த 23ஆம் தேதி ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில், ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களின் நியமனம், மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைகள் என அனைத்துமே தன் ஒப்புதலுடன்தான் அறிவிக்கப்படுகின்றன என கூறியிருந்தார். தமிழ்நாட்டில் ஒரு புது அரசியலை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்கத் தான் அரசியலுக்கு வருகிறோம் என குறிப்பிட்டிருந்தார்.

எதற்காக எந்த எண்ணத்துடன் அரசியலுக்கு வருகிறோம் என்பது மிக மிக முக்கியம் என தெரிவித்திருந்தார். மேலும் 30 அல்லது 40 வருடங்கள் ரசிகர் மன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பது மட்டுமே மக்கள் மன்றத்தில் பொறுப்பு வகிக்க தகுதி ஆகிவிடாது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் இன்று தனது மன்றத்தின் நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 23ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளை சொல்லியிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும் அதில் உள்ள உண்மையையும், நியாத்தையும் புரிந்துகொண்டதற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களைப் போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். என்னையும், உங்களையும் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் போனாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Response