ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை-வேதாந்தா குழுமத்தின் இயக்குநர் கிசோர் குமார்..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை என வேதாந்தா குழுமத்தின் இயக்குநர் கிசோர் குமார் தெரிவித்துள்ளார்.

பராமரிப்புக்காக மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கிராம மக்கள், மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பல்வேறு அமைப்புகளும் இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் கொந்தளிப்பை பார்த்து இந்த ஆலையின் உரிமத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்காததால் செயல்பாடு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமா என வேதாந்தா குழுமத்தின் வர்த்தக மேம்பாட்டு பிரிவு இயக்குநர் கிஷோர் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ஆலையை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமத்தைப் பெறச் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியவர், ஆலையிலிருந்து வெளியாகும் மாசு குறித்த தகவல்கள் மற்றும் தொடர் கண்காணிப்புகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக உள்ளது என்றார்.

மேலும் ஆலையின் உரிமம் காலாவதியாவதற்கு முன்பே, அதனை நீட்டிக்கக் கோரி மனு அளித்ததாகவும், உரிமம் காலாவதியான பிறகே தமிழக அரசு கூடுதல் தகவல்களை கேட்டுள்ளது என்று குற்றம் சாட்டியவர், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்படுவதற்கு பசுமை தீர்ப்பாயங்களும் மற்ற நீதிமன்றங்களும் நீண்டகாலத்துக்கு முன்பே சட்டப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது. ஆலையை மூடுவதால் நாள்தோறும் ஆயிரத்து 200 டன் தாமிர உற்பத்தி பாதிக்கப்படும். இறக்குமதி அதிகரிக்கும் என்றும் கிஷோர் குமார் தெரிவித்தார்.

இதனிடையே உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யக் கூடாது என்பது மட்டுமன்றி, அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போது செயல்படாமல் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்பட அனுமதித்தால் அடுத்த 24 மணி நேரத்தில் போராட்டத்தை அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response