விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும்-முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை : காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தமிழகத்தின் உரிமையை விட்டுத்தராது என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தியும் அதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், மத்திய அரசு அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் விளக்கம் கேட்டு நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு மீது நீதிமன்ற அவதூறு வழக்கைத் தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை தமிழக அரசு எப்போதும் விட்டுத்தராது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவிரி விவகாரத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் என்றும், மத்திய அரசு மீது தாக்கல் செய்துள்ள வழக்கில் உறுதியாக வாதாட வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு மத்திய அரசு மனுத்தாக்கல் செய்திருப்பது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. ஏப்ரல் 2ம் தேதி தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Response