ஜப்பானில் “கோச்சடையான்” இசை வெளியீட்டை முன் நின்று நடத்தும் தமிழர்!!

கணேசன் ஹரீநாராயணன், 19 வருடங்களுக்கு முன் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற அவர் வேலைபார்த்த நிறுவனத்தால் ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர், இன்று ஜப்பானில் சொந்தமாக தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல நிறுவன்ங்களை நிறுவி ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஜப்பானியர் உட்பட வேலைவாய்ப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்.

பல்வேறு தொழில்துறைகளில் சாதித்துக் கொண்டிருக்கும் கணேசன் ஹரீ நாராயணன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோவிந்தாஸ் என்கிற உணவகமும் நடத்தி வருகிறார். இந்தியர்களுக்குக் குறிப்பாகத் தமிழர்களுக்கு அவர்கள் வீட்டிலிருப்பது போன்ற உணர்வைத் தரும் அளவிற்கு நமது பாரம்பரிய உணவு வகைகளை தனது உணவகத்தில் வழங்கிவருகிறார். மேலும் கடந்த 7 ஆண்டுகளாக டோக்கியோ தமிழ்ச்சங்கத் தலைவராகவும் பதவி வகித்து தமிழுக்கும் அளப்பறிய சேவையாற்றி வருகிறார்.

ஜப்பான் மொழியில் நன்கு தேர்ச்சிபெற்ற கணேசன் ஹரீ நாராயணனை ஜப்பான் அரசியல் பிரமுகர்கள், டோக்கியோ மாகாண முதல்வர் உட்பட நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். தனது நாட்டு இயற்கை அழகினை உலகிற்கு தெரியப்படுத்தி தங்கள் நாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தத் திட்டமிட்ட ஜப்பான் அரசிற்கு முதலில் ஞாபகம் வந்தது இந்திய சினிமாத்துறையும் ஹரீநாராயணனும் தான். இந்தியத் திரைப்படத்துறைக்கும் ஜப்பானுக்கும் ஒரு பாலமாகச் செயல்பட அந்நாடு கேட்டுக் கொண்டதையடுத்து கணேசன் ஹரீஷ் நாராயணன் பரபரப்பாகி விட்டார். சமீபத்தில் தீயா வேலை செய்யனும் குமாரு படக்குழுவினருக்கு ஜப்பானில் படப்பிடிப்பு நடத்த ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு ஜப்பான் அரசில் இருந்து ஊக்கத் தொகையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இயக்குனர் சுந்தர் சி, கதாநாயகன் சித்தார்த், கதாநாயகி ஹன்சிகா மோட்வானி உட்பட தீயா வேலை செய்யனும் குமாரு குழுவினருக்கு ஹரீ நாராயணன் தீயா வேலை செய்த்து மிகவும் பிடித்துப்போய்விட தங்களது சக கலைஞர்களுக்கும் ஹரீ நாராயணனைப் பற்றிச் சொல்லியிருக்கின்றனர். விளைவு, அடுத்தடுத்து பல படங்களின் படப்பிடிப்புகள் ஜப்பானில் நடைபெற இருக்கின்றன.

இதுகுறித்து கணேசன் ஹரீ நாராயணனிடம் கேட்டபோது, “இங்கிருந்து ஜப்பானுக்கு வேலைக்குச் செல்லும் பலருக்கும் பெரிய பிரச்சினையாக இருப்பது ஜப்பான் மொழிதான். முதலில் ஜப்பான் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இன்று சரளமாக ஜப்பான் மொழியினைப் பேசுகிறேன். அதுதான் என்னைத் தேடி இவ்வளவு வாய்ப்புகள் வரக் காரணமாகவும் அமைந்து விட்டது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்த் திரைப்பட்த்தின் படப்பிடிப்பு ஜப்பானில் நடந்திருக்கிறது. இன்று பல தயாரிப்பு நிறுவனங்கள் பி.வாசு உள்ளிட்ட பல இயக்குனர்களும் என்னை அணுகியுள்ளனர். ஜப்பானில் படப்பிடிப்பு நடத்த வேண்டுமென்றாலும் சரி. ஜப்பானில் என்ன உதவி வேண்டுமானாலும் நம் மக்கள் என்னை அணுகலாம்”என்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜப்பான் நாட்டில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதால் கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவினை டோக்கியோவில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். கணேசன் ஹரீநாராயணன் தான் அதனை முன்நின்று ஒருங்கிணைக்கப் போகிறார்.

ஜப்பானில் அவரது உணவகத்தில் சாப்பிட்டு உள்ளத்தைப் பறிகொடுத்த தமிழ்த்திரைப்படக் கலைஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்னையில் சேத்துப்பட்டில் தனது உணவகத்தின் கிளையைத் (MSG Kitchens) திறந்திருக்கிறார். மூத்த இயக்குனர்கள் கங்கை அமரன், வாசு உட்பட இயக்குனர் சுந்தர் சி, குஷ்பு, நடிகர் சித்தார்த், பரத், பாடகி சின்மயி, பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா ஆகிய பிரபலங்கள் வந்திருந்து வாழ்த்தினார்கள்.

டோக்கியோத் தமிழ் சங்கம் மூலம் கடந்த ஐந்த ஆண்டுகளாக ஜப்பானில் தமிழ் வருடப்பிறப்பினைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் ஹரி நாராயண் இந்தியத் திரை நட்சத்திரங்கள் பலரை ஜப்பானுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஐடி, ஈவெண்ட் மேனெஜ்மெண்ட், உணவகம் மற்றும் பல்வேறு துறைகளடங்கிய MSG Japan Corporation நிறுவனத்தைக் கடந்த 2010 முதல் திறம்பட நடத்தி வருகிறார்.