21 ரூபாய்க்கு பெண் குழந்தைகளை விற்கும் அவலத்தை, படமாக்கிய பாலாவின் உதவியாளர்!!

கௌதம் விஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்க ஆச்சார்யா ரவி எழுதி இயக்கும் ‘என்னதான் பேசுவதோ’ படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் விஜய்ராம், விக்னேஷ், ரோசன், சின்னச்சாமி தாஸ் ஆகியோருடன் மிஸ்.ஹைதராபாத் தக்ஷா கதாநாயகியாக நடிக்கிறார். ஒளிப்பதிவு – A.S. செந்தில்குமார். இசை – D. இமான்.

படம் பற்றி இயக்குனர் கூறும்போது, “வித்தியாசமான கதைக் களத்துக்காகக் காத்திருந்த போது, பீகாரில் பெண் குழந்தைகள் விற்கப்படுகிறார்கள் என்ற செய்தியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். என்ன காரணத்திற்காக விற்கப்படுகிறது, யாரால் வாங்கப்படுகிறது, விற்கப்பட்ட அந்த பெண் குழந்தை பின்னாளில் என்ன ஆகிறது? தற்போதைய அந்த பெண்ணின் நிலைமையை அவள் பெற்றோர்கள் அறிவார்களா? இப்படி ஆயிரம் கேள்விகள் எழுந்தது, பீகாருக்கு போனேன்.

குழந்தைகளை விற்று வாங்குவதற்கென்றே பீகாரில் ஒரு கிராமம், கிட்டத்தட்ட நம்மூர் மாட்டுச் சந்தைபோல் வாரத்திற்கு ஒருநாள் கூடுகிறது. தங்களது பெண் குழந்தைகளை பைக்கிலும், ஆட்டோவிலும், சைக்கிளிலும் வந்து விற்றுவிட்டு போவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து நடப்பவைகளை கண்காணித்தேன். இதற்கிடையில் நக்சலைட்டுகள் தொந்தரவு வேறு.

பெயரை மாற்றி, உருவத்தை மாற்றிக் கொண்டு அவர்களோடு சுற்றித் திரிந்து நான் கண்டதையும், கேட்டதையும் வைத்து கதைக்களத்தை உருவாக்கினேன். இதை திரைப்படமாகக் கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்தேன். நான் பார்த்த காட்சிகள் திரைப்படத்தில் வர வேண்டுமென்றால், பீகார் சென்று அந்த கிராமத்திலேயே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று நினைத்தேன்.  வெற்றிகரமாக பதிவும் செய்து விட்டேன்.

பீகாரில் உள்ள மக்களையே நடிக்கவும் செய்து விட்டேன். சென்னை, ஹைதராபாத்  போன்ற இடங்களிலும் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். குழந்தை வாங்கலியோ குழந்தை என்ற சோகக் குரல்கள் பீகார் முழுக்க ஒலிக்கிற மாதிரியான உணர்வு ஏற்பட்டது என்றார் ஆச்சார்யா ரவி.