குமரி மாவட்டத்தை மீண்டும் மிரட்டிய மழை: – மீட்பு நடவடிக்கையில் சுணக்கம்!

13-1513137470-rain345612

குமரி மாவட்டத்தில் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. புயலின் பிடியிலிருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், தற்போது பெய்த கனமழையால் மீட்பு நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

 

குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி கொட்டித் தீர்த்த பெருமழையும் அதன் தொடர்ச்சியாக மறுநாளில் ஏற்பட்ட புயலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து. குடியிருப்புகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சிரமத்தைச் சந்தித்தனர். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒழுகினசேரி ஆற்றுப் பாலத்தின் மீது வெள்ளம் பாய்ந்ததால் நெல்லை- நாகர்கோவில் சாலையில் பேருந்துகள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.

a2630103f78ddcbe0137e072160f9567

அத்துடன், நெல் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அந்தச் சேதத்திலிருந்து மக்கள் இப்போதுதான் மீண்டு வருகிறார்கள். இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் இன்று சுமார் ஒரு மணி நேரத்துக்குக் கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் ஓடியது. இந்த மழையால் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வந்த மீட்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

குறிப்பாக, மின் கம்பங்கள் நடவு செய்யும் பணிகள், மின் வயர்களைச் சீர்ப்படுத்துதல் போன்ற பணிகள் மழையால் பாதிக்கப்பட்டன. வெள்ளச் சேதத்தை மதிப்பிடும் பணிகளிலும் மழை பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனமழையால் பொதுமக்களும் அச்சமடைந்தனர். மழையின் குறுக்கீடு ஏற்பட்ட போதிலும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வேகமாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Response