ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை- அரசியல் சாசன பெஞ்சுக்கும் மாற்றம்!!

08ef04916a7c965217a7029b80c24899

 ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரிய பீட்டாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கும் உச்சநீதிமன்றம் மாற்றி உள்ளது.

ஜல்லிக்கட்டுக்கான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டா மனுத் தாக்கல் செய்தது. இம்மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் கடந்த மாதம் விசாரித்தது.

அந்த விசாரணையின் போது பீட்டா மனு மீது பதில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று இவ்வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. பீட்டா வழக்கறிஞர்கள், தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து வாதங்களை முன்வைத்தனர்.

ஆனால் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, அரசியல் சாசனத்தின் 29(1)-வது பிரிவின் கீழ் ஜல்லிக்கட்டை பாதுகாக்க முடியும். மத்திய அரசைப் போல மாநில அரசும் சட்டம் இயற்றுகிற அதிகாரம் படைத்தது. ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரம் என்றார்.

இந்த வாதங்களைத் தொடர்ந்து நீதிபதிகள், தமிழக அரசின் அவசர சட்டமானது மிருகவதை சட்டத்துக்கு எதிரானதா? இல்லையா? என்பது உள்ளிட்ட அம்சங்களை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு இந்த வழக்கு மாற்றப்படுகிறது என தெரிவித்தனர். முன்னதாக ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற பீட்டாவின் கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

ஆகையால் தற்போதைய நிலையில் 2018-ல் ஜல்லிக்கட்டு நடத்த எந்த தடையுமே இல்லை என்பது திட்டவட்டமாகி உள்ளது.

Leave a Response