“இடுப்புல குடமே நிற்கலே” – அடித்தளம் கதாநாயகி ஆருஷி பேச்சு!!

எஸ்.சேதுபதிராஜன் வழங்க, எஸ்.எம்.எஸ் தியேட்டர்ஸ் சார்பில் பி.எல்.ஆர். இளங்கண்ணன் இயக்கும் ‘அடித்தளம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கத்தில் நடந்தது. பாடல்களை தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.-ஏ.சந்திரசேகர் வெளியிட கட்டிட தொழிலாளர்கள் பெற்றுக் கொண்டார்கள். இந்த படம் கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டது.

பாடல்களை வெளியிட்டு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது – எல்லாவற்றுக்கும் ஒரு பேஸ்மென்ட் முக்கியம். அதாவது அடித்தளம். அது இல்லேன்னா எந்த கட்டிடமும் நிற்காது. இந்த படத்தின் இசையமைப்பாளர் தாஜ்நு£ர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றியிருக்கிறார். அவருக்கான அடித்தளம்தான் ஏ.ஆர்.ரஹ்மான். அதே மாதிரி இளங்கண்ணன் டைரக்டர் ஷங்கரிடம் பணியாற்றியவர். இவருடைய அடித்தளம்தான் ஷங்கர்.

இளங்கண்ணன் நல்ல டைரக்டர். இது அவர் இயக்குகிற மூன்றாவது படம். உண்மையில் அவரது மூன்றாவது படத்தில் விஜய்தான் நடித்திருக்க வேண்டும். இப்படத்தை இயக்குவதற்கு முன் விஜய்க்காக என்னிடம் ஒரு கதையை சொன்னார். மிக அருமையான கதை அது. நிஜ சம்பவத்தை பின்னணியாக கொண்ட அந்த கதை கமர்ஷியல் மற்றும் ஆக்ஷன் கலந்தது. நானும் விஜய்யிடம் அவரை அனுப்பி வைத்தேன். அவர் அந்த கதையை கேட்டுவிட்டு ‘நன்றாக இருக்கிறது’ என்று பாராட்டினார். ஆனால், நான் பெரிய டைரக்டர்களின் படங்களில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் இந்த கதையில் இன்னும் சில காலம் கழித்து நடிக்கிறேன் என்றார். நிச்சயம் இளங்கண்ணன் இயக்குகிற படத்தில் விஜய் நடிப்பார். அதில் சந்தேகமில்லை.

எல்லா காலத்திலும் வென்று நிற்க கூடியவை மெலடி பாடல்கள்தான். அந்த வகையில் இந்த படத்தில் அருமையான மெலடி பாடல்களை உருவாக்கியிருக்கிறார் தாஜ்நு£ர். நான் இரவில் தனியாக அமர்ந்து மெலடி பாடல்களைதான் கேட்பேன். நானும் தனிமையும் அந்த மெலடி பாடல்களும் மட்டும்தான் அங்கேயிருப்போம். கேட்கும்போதே மனதுக்கு இதமாக இருக்கும். நானெல்லாம் இளையராஜா பாடல்களை கேட்டு வளர்ந்திருக்கிறேன். இளையராஜா அந்த காலத்தில் போட்ட மெலடி பாடல்கள் மாதிரி, இந்த காலத்தில் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் தாஜ்நு£ர். அவருக்கு என் பாராட்டுகள்.

இந்த கதை கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை. நான் சிறு வயதில் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வந்தபோது முதலில் ஒரு ஓட்டலில்தான் வேலைக்கு சேர்ந்தேன். மூன்றாவது நாளே அங்கிருந்து என்னை விரட்டிவிட்டார்கள். அதற்கப்புறம் கட்டிட வேலை நடக்கும் ஒரு இடத்தில் மேஸ்திரியாக சேர்ந்தேன். அப்படியே செங்கல்லை வைத்து நானே சுவர் எழுப்பவும் கற்றுக் கொண்டேன். நானும் ஒரு காலத்தில் கொத்தனராக வேலை பார்த்திருக்கிறேன் என்பதை இப்போதுதான் முதல் முறையாக சொல்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

படத்தின் கதாநாயகி ஆருஷி பேசியதாவது –

முதலில் கதையே சொல்லாமல்தான் என்னை கேமிராவுக்கு முன்னால் நிற்க வைத்தார் டைரக்டர் இளங்கண்ணன். ஒரு அழுக்கு புடவையை கொடுத்தார். ‘ஐயோ, இதை போய் கட்டணுமா’ என்று நினைத்துக் கொண்டே கட்டினேன். டல் மேக்கப் போட்டாங்க. நிறைய செங்கல்லை எடுத்து தலையில் அடுக்கினாங்க. ஒரு வேலையும் செய்யாமல் செல்லமா வளர்ந்தவள் நான். அதன் கஷ்டம் அப்போதுதான் புரிந்தது. அவர் சொல்லிக் கொடுத்ததை நான் சரியாக செய்த பிறகுதான் எனக்கு இந்த படத்தின் கதையையே சொன்னார்.

படப்பிடிப்பு சின்ன குடிசையில் நடந்தது. அந்த வீட்டை நானே பெருக்கி, நானே பாத்திரம் தேய்த்து வேலை செய்வேன். இதற்கு முன் வீட்டில் ஒரு வேலையும் நான் செய்தது இல்லை. அங்கே எல்லா வேலைகளையும் நானே செய்யும்போது கூட பொறுத்துக் கொண்டேன். ஆனால் தண்ணி எடுக்க குடத்தை இடுப்பில் வைத்தபோதுதான் படாத பாடு பட்டுவிட்டேன்.

குடம் இடுப்பிலேயே நிற்க மாட்டேங்குது. குடத்தின் மேல் கான்சன்ட்ரேஷன் போச்சுன்னா டயலாக் மறந்துடுது. டயலாக்கை மனசில் வைத்துக் கொண்டால் குடம் தடுமாறுது. எப்படியோ கஷ்டப்பட்டு இந்த படத்தில் நடித்தேன். அதற்கான பலன் கைகூடி வரும்னு நம்புறேன் என்றார் ஆருஷி.

விழாவில் கலந்து கொண்டு படத்தின் குறுந்தகட்டை பெற்றுக் கொண்ட கட்டிட தொழிலாளர்களுக்கு எஸ்.சேதுபதிராஜன் உடைகள் மற்றும் உதவித்தொகையை வழங்கினார்.

விழாவில் படத்தின் கதாநாயகன் அங்காடித்தெரு மகேஷ், இசையமைப்பாளர் தாஜ்நு£ர், கவிஞர் நா.முத்துக்குமார், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஆகியோர் கலந்து கொண்டார்கள். இயக்குனர் பி.எல்.ஆர்.இளங்கண்ணன் நன்றி கூறினார்.