மூன்று பேர் மூன்று காதல் – விமர்சனம்!!

இயக்குனர் வசந்தின் ஒவ்வொரு படமுமே வித்தியாசமான கதைக்களத்தோடு அமைந்திருக்கும். கேளடி கண்மணி, ஆசை, ரிதம் என தனி பாணியில் இருக்கும். அந்த பாணியில் அவர் இயக்கியிருக்கும் படம் தான் இந்த மூன்று பேர் மூன்று காதல்.ஆனால் அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்ய தவறியிருக்கிறது இந்த மூன்று பேர் மூன்று காதல்..

மூன்று திணைகளும், அங்கு நடக்கும் காதலும் தான் கதைக்களம். குறிஞ்சி எனப்படும் மலையும் மலைசார்ந்த பிரதேசத்தில் ஒரு காதல், மருதம் எனப்படும் சமவெளிப்பகுதிகளில் ஒரு காதல், நெய்தல் எனப்படும் கடலும் கடல் சார்ந்த பகுதியில் ஒரு காதல் என மொத்தம் மூன்று காதல். இதில் யாருடன் யாருக்கு காதல், அவர்களின் காதல் என்ன ஆனது, மூன்று காதலுக்கும் என்ன தொடர்பு என்பதை இரண்டரை மணி நேர படத்தில் விளக்கியிருக்கிறார் இயக்குனர் வசந்த்.

டிசம்பர் 14 2016ல் ஆரம்பிக்கும் கதையில், விமல் தன் அனுபவத்தை விளக்க கதை நான்கு வருடங்கள் பின்னோக்கி செல்கிறது. தொலைந்த செல்போனை மீட்டு கொடுத்தலில் ஆரம்பிக்கிறது விமலின் ஒருதலைக்காதல். அந்த பெண்ணை பின்தொடர்ந்து காதலை வளர்க்கிறார். காதல் வளர்ந்த நிலையில் விமல் அஞ்சனாவை விட்டு விலகுகிறார். அதற்கு காரணமென்ன என்பதை விளக்க தொடங்குகிறது சேரனின் கதை.

நாகர்கோவிலில், எதிர்பாராத தவறுகளால் சிறை சென்று வாழ்க்கையை இழந்தவர்களுக்கு மறுவாழ்வளிக்க புன்னகை என்ற அமைப்பை தொடங்கி சேவை செய்து வருகிறார் சேரன்.அவரை ஒருதலையாக காதலிக்கிறார் மல்லிகா. சேரனின் அம்மாவிடமும் தன் விருப்பத்தை சொல்கிறார். அம்மாவிற்கு மல்லிகாவை பிடித்து போகிறது. ஆனாலும் சேரனின் இலட்சியங்கள் வேறு என புரிய வைக்கிறார். பின் மல்லிகா சேரனின் அமைப்பில் இணைந்து சிறப்பாக சேவை செய்கிறார். இந்நிலையில் சேரனுக்கு பிரான்சில் வந்து சேவை செய்ய அழைப்பு வருகிறது.மல்லிகாவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சேரன் குடும்பத்தோடு கிளம்புகிறார்.

ஒரு சந்திப்பில் விமல் இந்த நிகழ்வுகளை கேட்க நேருகிறது. தன் சுயநலத்தை விட்டு ஏதாவது செய்ய முற்படுகிறார். இந்நிலையில் விமலின் பள்ளித்தோழி திவ்யா சென்னையில் அர்ஜுனை காதலிக்கிறார்.நீச்சல் வீராங்கனையான திவ்யாவின் பயிற்சியாளர் தான் அர்ஜுன். ஒலிம்பிக்கில் திவ்யா கலந்து கொள்ள வேண்டும் என்பது தான் அர்ஜுனின் விருப்பம்.இவர்களின் அழகான காதலில் குறிக்கிடும் ஒரு விபத்து, அதனால் அர்ஜுனின் உடல்நிலை?, அர்ஜுன் ஆசையை திவ்யா நிறைவேற்றினாரா?  என்ற இந்த சம்பவத்தையும் கேட்கிறார் விமல்.

இந்த மூன்று கதைகளையும் வைத்து ஒரு புத்தகம் எழுதுகிறார் விமல். அந்த வெளியீட்டு விழவுடன் கதை முடிகிறது. அனைத்து ஜோடிகளும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை சொல்லியிருக்கிறார் வசந்த்.

படத்தில் சேரனின்  கதாபாத்திரம் மற்றும் களம் சற்று சுவாரஸ்யமானது. விமலின் கதாபாத்திரம் அவருக்கு சரியாக பொருத்தமில்லை, ஆனாலும் அவர்தான் மையப்புள்ளி. அர்ஜுன் கதாபாத்திரத்தோடு பொருந்தி போனாலும் கொஞ்ச நேரமே வருகிறார். பானு, லாசினி, சுர்வீன் சாவ்லா என மூன்று நாயகிகளுமே நன்றாக நடித்துள்ளனர். இந்த மூன்று கதைகளிலும் யாருக்கு எந்த நாயகி ஜோடி என்பதை கூட போட்டியாக வைக்கலாம்.

படத்தில் முக்கிய பங்கு இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளருடையது. போஜன் கே.தினேஷின் கேமரா மூன்று இடங்களையும் அழகாக படம் பிடித்துள்ளது. மலை, கடல், நகரம் என அத்தனையும் அழகு.

படத்தின் பலமே இசைதான். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் கட்டிபோட்டு விடுகின்றது. இதற்கும் மேல் பாடல்கள் ஆங்காங்கே பின்னணியில் ஒலிப்பது சிறப்பு. பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும் நிறைய இடங்களில் திணித்திருப்பதால் கதையில் மேலும் தொய்வை ஏற்படுத்துகிறது.