நான்கு நாள் பயணமாக அஸாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் செல்கிறார் குடியரசுத் தலைவர்

 qqq

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வட கிழக்கு மாநிலங்களான அஸாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூருக்கு நவ.19-ம் தேதி 4 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.

 

இதுகுறித்து வெளியான தகவலில், ”குடியரசுத் தலைவர் ஆன பிறகு ராம்நாத் கோவிந்த் முதல்முறையாக வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்கிறார்.

 

முதலில் நவ.19 அன்று இட்டாநகரில் உள்ள விவேகானந்த கேந்திராவின் விழாவில் பங்கேற்கும் ராம்நாத், அதே நாளில் அருணாச்சலப் பிரதேசத்தின் புதிய சட்டப்பேரவையை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

 

அடுத்த நாளில் அஸாமின் சில்சர் பகுதியில் நடைபெறும் நமாமி பாரக் பண்டிகையின் நிறைவு விழாவில் கலந்துகொள்கிறார். அத்துடன் குவாஹாட்டி பல்கலைக்கழக விழாவிலும் பங்குபெறுகிறார்.

 

அதைத் தொடர்ந்து நவம்பர் 21-ம் தேதி மணிப்பூர் செல்லும் ராம்நாத், வடகிழக்கு வளர்ச்சி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். அத்துடன் மணிப்பூர் ஷாங்காய் ஆண்டு விழாவிலும் கலந்துகொள்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதைத் தொடர்ந்து டெல்லி திரும்பும் ராம்நாத், முன்னதாக மணிப்பூரில் உள்ள இந்திய தேசிய ராணுவத்தின் போர் நினைவுச் சின்னத்தையும் பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response