மனிதக் கழிவுகளை அள்ளும் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: உயர் நீதிமன்றம் கேள்வி

manual-scavenging-3

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்கு விதிக்கப்பட்ட தடை மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் பாடம் நராயணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் பாடம் நாராயணன் ஆஜராகி, இதுகுறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த குழுவின் கூட்டம் எப்போதாவதுதான் நடைபெறுகிறது என்று கூறினார். மேலும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு தர தமிழக அரசு மறுக்கிறது. இந்த வேலையைச் செய்பவர்களுக்கான மறுவாழ்வுக்கு நிதி ஒதுக்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசும் இதுவரை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், தூய்மை இந்தியா திட்டத்தில் உள்ள நிதி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக பயன்படுத்தப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியதுடன், இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Leave a Response