சனத்குமார் ஆற்றின் குறுக்கே தண்டரையில் தடுப்பணை: விவசாயிகள் கோரிக்கை.  

 

Daily_News_2017_2072063684464

சனத்குமார் ஆற்றின் குறுக்கே தண்டரை அருகே அணை கட்டி வீணாக வெளியேறும் தண்ணீரை சேமிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக தொடர்மழை பெய்து வருவதால் தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி ஆகிய பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. 12 ஆண்டுக்கு பின் அனைத்து ஏரிகள் நிரம்பியுள்ளதால், கிராமங்களில் விவசாயிகள் சிறப்பு பூஜைகள் செய்தும், ஆடுகள் வெட்டியும் வழிபாடு நடத்தி வருகின்றனர். தளி பெரிய ஏரி மற்றும் சாரண்டப்பள்ளி வண்ணம்மா ஏரி ஆகியவற்றின் உபரி நீர் சனத்குமார் ஆற்றில் செல்கிறது. சனத்குமார் ஆறு, தேன்கனிக்கோட்டை தண்டரை கிராமம் வழியாக பேவநத்தம் காட்டு வழியில் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அணைக்கு சென்றடைகின்றது.

தொடர் மழைக்கு பஞ்சப்பள்ளி அணையும் கடந்த வாரம் முழு கொள்ளவை எட்டி, உபரி நீர் பாசனத்திற்கும், அப்பகுதியில் உள்ள ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. 12 ஆண்டாக வறண்டு கிடந்த சனத்குமார் ஆற்றில், கடந்த 2 மாதமாக தொடர்ச்சியாக வெள்ளம் ஏற்பட்டு உபரிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் தண்டரை கிராமம் அருகே அணை கட்டி உபரி நீரை சேமித்து குடிநீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும், விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்த நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களான கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், காமராஜர் ஆட்சியில் தண்டரை கிராமம் அருகே சனத்குமார் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட சர்வே பணிகள் நடந்தன.

14KriDamWater Story 2

அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் அணை கட்ட கோரிக்கை விடுத்தும், அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. மழை காலங்களில் சனத்குமார் ஆற்றில் கட்டுக்கடங்காத வெள்ளம் செல்வது வழக்கம். அச்சமயத்தில் வெள்ளத்தை தடுத்து தடுப்பணைகளில் தண்ணீர் சேமித்தால், கோடைக்காலங்களில் தேன்கனிக்கோட்டை பகுதிக்கு நல்ல குடிநீர் கிடைக்கும், விவசாயம் பெருகும், பஞ்சம் வராது. 200 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கொண்டு வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமும் தேவைப்படாது. கோடிக்கணக்கில் அரசுக்கு பணம் மிச்சமாககும், குறைந்த செலவில் சனத்குமார் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்து, கிராமங்களுக்கு புளோரைடு இல்லாத குடிநீர் விநியோகம் செய்யலாம். அரசு இத்திட்டத்தை செயல்படுத்தினால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதியும் பெருகும், விவசாயம் செழிக்கும், என்றனர்.

Leave a Response