சென்னையின் பிரபல கடையில் சட்டக் கல்லுரி மாணவியை தரக்குறைவாக நடத்தி உலைச்சல் ஏற்படுத்திய ஊழியர்கள்:


கடந்த வாரம் பிப்ரவரி 13ஆம் தேதி Dr.அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவி ஆதிலக்ஷ்மி தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஸ்டோருக்கு ஷாப்பிங் செய்ய சென்றுள்ளார். மூன்றாவது மாடிக்கு சென்று அழகு சாதன பொருட்களை வாங்கி கொண்டு பில் செலுத்திவிட்டு தரைதளத்திற்கு வந்தார். அங்குள்ள மகளிர் காவலாளி பில்லை பரிசோதித்தபோதுதான் பில்லில் தவறான தேதி(அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி) பதிவாகி இருப்பதை ஆதிலட்சுமி உணர்ந்தார். உடனே அந்த காவலாளியிடம் அது குறித்து ஆதிலட்சுமி விசாரித்தார்.

மாணவியின் விசாரணை குறித்து பயந்த காவலாளி உடனே கடை மேலாளரையும், சில நபர்களையும் அழைத்தார். சட்டகல்லூரி மாணவியான ஆதிலக்ஷ்மியின் விசாரணை அங்கு வேலை செய்யவில்லை. மாணவி இந்த பிரச்சினையை பெரிதக்கிவிடுவார் என சந்தேகப்பட்ட கடை ஊழியர்கள், மாணவியை ஒரு அறைக்குள் அழைத்து சென்று அவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்ய திட்டமிட்டனர்.

அவர்கள் திட்டமிட்டபடி, அந்த மாணவியை பயங்கரமாக மிரட்டினர். மேலும் ஆண் மற்றும் பெண் காவலர்கள் அந்த மாணவியின் ஆடைக்குள் கையை விட்டு அவரிடமிருந்த பணம் மற்றும் கல்லூரி அடையாள அட்டையையும் பிடுங்கி கொண்டனர். அவரிடமிருது கைரேகை மற்றும் கையெழுத்தை ஒரு வெள்ளைத்தாளில் வாங்கி வைத்து கொண்டனர். கடை ஊழியர்கள் அந்த மாணவியின் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டு யாருக்கும் போன் செய்ய அனுமதிக்கவில்லை. பின்னர் அவரை விடுவித்த போது அவரது செல்போனை மட்டும் திருப்பி கொடுத்தனர்.

கடையை விட்டு வந்த மாணவி அவரின் நண்பர்களையும், தான் வழக்கறிஞர் பயிற்சி பெற்று வரும் மூத்த வழக்கறிஞர் திரு.சாலமனையும் சந்தித்து இது குறித்து பேசினார். வழக்கறிஞர் சாலமன் இந்த விஷயத்தை தனது நண்பர்களிடத்தில் கலந்து பேசி சென்னை கமிஷனர் திரு.ஜார்ஜ் அவர்களை சந்தித்து ஒரு மனு அளித்தார். அவர்கள் எதிர்பார்த்தபடி எந்த நடவடிக்கையும் போலீஸ் எடுக்காததால் மாணவி ஆதிலட்சுமி சில வழக்கறிஞர்கள் மற்றும் அவரின் கல்லூரி நண்பர்களோடு சென்னை NSC போஸ் ரோட்டில் பிப்ரவரி 14ஆம் தேதி சாலை மறியல் செய்தார்.

அங்கு சென்ற போலீசார் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி அனைவரையும் கலைந்து செல்ல கோரிக்கை விடுக்க அனைவரும் கலைந்து சென்றனர். இது குறித்து மாணவி ஆதிலட்சுமி நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில் “நாங்கள் அளித்த மனுவின் அடிப்படையில் என்னை தாக்கிய இரண்டு கடை ஊழியர்களை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று கூறினார்..

மூத்த வழக்கறிஞர் திரு.சாலமன் இது குறித்து கூறும் போது “போலீசார் சரவணா செல்வரத்தினம் கடைக்கு சாதகமான முறையில் நடவடிக்கை எடுத்துள்ளனரே தவிர மனுவின் அடிப்படையில் எதையும் செய்யவில்லை. மேலும் கடை ஊழியர்கள் ஆதிலக்ஷ்மியிடமிருந்து வெள்ளைத்தாளில் வாங்கிய கையெழுத்தை வைத்து ஒரு மனுவையும் தயார் செய்து உள்ளனர்.

மேலும் மாம்பலம் சரக துணை ஆணையாளர் தமிழ்செல்வன் கடை ஊழியர்களால் பின்னப்பட்ட அந்த போலி மனுவை கோர்ட்டில் ஒப்படைக்காமல், கிழிக்க முயற்சிக்கிறார்” என்றும் திரு.சாலமன் குற்றம் சாட்டியுள்ளார். போலீசார் இந்த பிரச்சினையில் சரியான நடவடிக்கை எடுப்பார்களா என்று சந்தேகிப்பதால், கோர்ட்டில் CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்க திட்டமிட்டுள்ளார் மூத்த வழக்கறிஞர் திரு.சாலமன்.