ஓடும் ரயில்களில் செல்பி எடுத்தால் அபராதம் ஆர்.பி.எப்-யின் புதிய அதிரடி

Ukrainian-daredevil-films-metro-train-riding-stunt
சமீபகாலமாக ஸ்மார்ட் போன்கள் இளைய தலைமுறையினரின் உடல் உறுப்புகளில் ஒன்றாக மாற தொடங்கியுள்ளது. முகநூல், வாட்ஸ்அப் போன்றவை இளைஞர்களின் தகவல் பரிமாற்ற கருவியாகவே காணப்படுகிறது. தற்போதைய தலைமுறையின் தொற்றுநோயாக கருதப்படும் ‘செல்பி’ மூலம் படங்களை கண்ட இடத்திலும் எடுத்து நட்பு வட்டாரத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். அதிலும் ரயில் நிலையங்களில் செல்பியின் தாக்கம் அதிகம். ரயில் முன்பு நின்று கொண்டும், ரயில் நிலையங்களில் அமர்ந்து கொண்டும், எஸ்கலேட்டரில் ஏறி நின்று கொண்டும் செல்பி எடுக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

சில இளைஞர்கள் மொத்தமாக பிளாட்பார்மில் நின்று கொண்டு புகைப்படங்களை எடுத்து குவிக்கின்றனர். ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து கொண்டு இடத்தை சுட்டிக்காட்டி புகைப்படம் எடுப்போரும் உள்ளனர்.இதனால் எதிர்பாராதவிதமாக விபத்துகள், காயங்கள் பெருகி வருகின்றன. சென்னையில் கடந்த சில ஆண்டுகளில் ஓடும் எலக்ட்ரிக் ரயில்களில் படம் எடுக்க முயன்று நூற்றுக்கணக்கானோர் இறப்பை எதிர்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலேயே சில தினங்களுக்கு முன்பு நின்று கொண்டிருந்த ரயில் பெட்டி மீது ஏறி செல்பி எடுத்த வாலிபர் மின்சார கம்பியில் அடிபட்டு இறந்தார். தொடர்ச்சியாக நடக்கும் விபத்துகளின் அடிப்படையில் ரயில் நிலையங்களில் செல்போன் மூலம் செல்பி மற்றும் அடிக்கடி புகைப்படம் எடுப்பவர்களை கண்காணிக்க ரயில்வே பாதுகாப்புத்துறைக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

நெல்லை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தண்டவாளம் மற்றும் எஸ்கலேட்டர், நடைமேடைகளில் படம் எடுப்போரை உடனடியாக எச்சரித்து அனுப்பி வருகின்றனர். ரயில்களில் ஆபத்துக்குரிய முறையில் படம் எடுப்பவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். நெல்லை திருச்செந்தூர் ரயிலில் இப்படி படம் எடுத்த சிலருக்கு சமீபத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து நெல்லை ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறுகையில், ‘‘ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் தேவையில்லாமல் செல்போனில் படம் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் படம் எடுக்கும் நபர்கள் குறித்த விபரங்களை கட்டணமில்லாத சேவை 182ல் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். காலை, மாலை நேரங்களில் முக்கிய ரயில்கள் வரும் வேளையில் செல்பி எடுக்கும் நபர்களை நாங்களும் கண்காணித்து கொண்டிருக்கிறோம்.

Leave a Response