டிஜிபிக்கு பணி நீட்டிப்பு செய்தது சரி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

rajendran

“டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன் மீது தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்றவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ய பெருந்தொகை லஞ்சம் வாங்கியதாக வருமான வரித்துறை குற்றம்சாட்டியுள்ளது.

ஓய்வு பெறும் நாளில், தமிழக டிஜிபியாக பணிபுரிந்த டி.கே.ராஜேந்திரனுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட ஏஐடியூசி செயலர் கே.கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை கோரி தலைமைச் செயலருக்கு வருமானவரித் துறை கடிதம் அனுப்பியுள்ளது. எனவே டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், அவர் மீதான புகார் தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் இருந்து சிபிஐக்கு மாற்றவும், சிபிஐ போலீஸார் சிறப்பு படை அமைத்து விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில் இன்று காலை முதல் வழக்காக எடுத்துக்கொண்ட நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக டிஜிபியாக பணிபுரிந்த டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது சரியே என தீர்ப்பளித்து வழக்கை முடித்துவைத்தது.

2 வாரங்களுக்குள் விசாரணைக் குழு..

அதே வேளையில், குட்கா, பான்பராக் போன்றவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ய டி.கே.ராஜேந்திரன் பெருந்தொகையை லஞ்சம் வாங்கியதாக வருமான வரித்துறை குற்றம்சாட்டியுள்ளது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் விசாரணைக் குழு ஒன்று அமைக்க வேண்டும். 2 வாரங்களுக்குள் இந்த குழு அமைக்கப்பட வேண்டும். விசாரணை விவரங்களை தலைமைச் செயலரிடமோ அல்லது டிஜிபியிடமோ பகிரக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், ஊழல் புகார் தொடர்பாக தன்வசம் உள்ள அனைத்து ஆவணங்களையும் வருமான வரித்துறை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Leave a Response