பாலியல் குற்றமாகக் கருதப்படுவது எது விளக்கம் அளிக்கும் நீதித்துறை நடுவர்!

naduvar
ஒழுக்கம், பண்பாடு பற்றி பெருமை பேசும் நம் நாட்டில்தான், வீட்டுக்குள்ளும் பொது வெளியிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகம் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அதிலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இது பற்றி அதிகாரிகளுக்கு புரிதலையும் சட்ட விழிப்புஉணர்வையும் ஏற்படுத்த, மாவட்ட சமூகப் பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் சார்பில், போலீஸ் அதிகாரிகளுக்கான குழந்தைகள் பாதுகாப்புத் திறன்வளர்ப்பு பயிற்சி முகாம் மதுரையில் நடந்தது.

மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் இந்த முகாமை தொடங்கி வைத்தார். முகாமில், ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதன்மை நீதித்துறை நடுவர் காயத்ரி தேவி பேசுகையில், “தொடுதல், பாலியல் உணர்வுடன் பார்த்தல் உள்ளிட்டவை, குழந்தைகள் மீதான பாலியல் குற்றமாகக் கருதப்படும். குழந்தைகள் மீதான குற்றங்கள் நடந்ததாகத் தகவல் தெரிந்ததும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து, குழந்தைகள் நல போலீஸ் அலுவலர் சம்பவ இடத்துக்கு உடனே வர வேண்டும். சம்பந்தப்பட்ட ஆவணம் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் பாரா நோட்டிலும் கையொப்பம் இட வேண்டும். பெரும்பாலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. முதல் தகவல் அறிக்கையில், பாதிக்கப்பட்ட குழந்தையை மைனர் என மட்டுமே குறிப்பிட வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் குற்றவாளி எனக் குறிப்பிடக்கூடாது. பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படும் குழந்தைகளின் முக்கிய ஆவணமாக, மருத்துவப் பரிசோதனைச் சான்றிதழ் மட்டுமே உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்க, மருத்துவப் பரிசோதனைச் சான்றிதழ், ஆவணங்கள், தடயங்கள், ஆடைகள், குற்றத்துக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் மிகவும் அவசியம். ஆனால், பெரும்பாலான வழக்குகளில் மருத்துவப் பரிசோதனை சான்று மட்டுமே உள்ளது. முக்கிய ஆவணங்கள் இல்லாததால், தீர்ப்பு வழங்குவதில் தொய்வு ஏற்படுகிறது. குழந்தைகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, குழந்தையின் விருப்பத்தின் பேரில் பெற்றோரிடம் அல்லது குழந்தைகள் காப்பகம் அல்லது உறவினரிடம் அனுப்புவதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்” என்றார்.

Leave a Response