சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து தெளிவின்மை நீடிக்கிறது…

cbsc
நாடு முழுவதும் 10.98 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வு எழுதி உள்ளனர். தேர்வு முடிவுகள், மே 19-ம் தேதியில் இருந்து வரும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், இன்று (மே 24) வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியது. கடந்த ஏப்ரல் மாதம், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கும் முறையை ரத்து செய்வதாக மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியதை அடுத்து விவகாரம் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு சென்றது.

சிபிஎஸ்இ முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், கருணை மதிப்பெண் முறையை ரத்து செய்திருப்பது நியாயமற்ற, பொறுப்பற்ற நடவடிக்கை என கண்டனம் தெரிவித்தது. இந்த முடிவு நடப்பாண்டே நடைமுறைக்கு வந்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் பழையை முறையே நீடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. எனவே, ஏற்கெனவே அறிவிக்கப்படி இன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக சிபிஎஸ்இ இன்று ஆலோசனை நடத்துகிறது. சிபிஎஸ்இ இயக்குநர் சதூர்வேதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரை சந்தித்து பேச உள்ளார். வழக்கமாக சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே cbse.nic.in , cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். இதுவரை அத்தகைய அறிவிப்பு ஏதும் வெளியாகாததால் சிபிஎஸ்இ தேர்வு முடிவு இன்று வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது

இதற்கிடையே நேற்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தங்களுக்கு கிடைக்கவில்லை என சிபிஎஸ்இ தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளதாக ஆங்கில மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளது. இன்று 10 மணிக்கு மேல் உத்தரவானது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்னர் தேர்வு முடிவு தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் குறிப்பிட்டு உள்ளன. பிப்ரவரி – மார்ச் மாதங்களில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்தது காரணமாகவும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டது.

Leave a Response