‘அன்னையர் தின’ த்தை முன்னிட்டு கூகுள் வெளியிட்டுள்ள சிறப்பு டூடுல்….

google dodul
உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு தாய்மையைப் போற்றும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

வாழும் தெய்வங்களாய் வலம் வரும் அன்னையர்களை போற்றும் வண்ணம், ஆண்டு தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், கூகுள் அதன் முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ள டூடுலில், தாயின் தியாகத்தை கதை வடிவில் வெளிப்படுத்தியுள்ளது. அனிமேஷன் வடிவிலான டூடுலில், கருத்தரிப்பில் இருந்து குழந்தை பெறும் வரையிலான காலகட்டத்தை விவரிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு கள்ளிச் செடி மூலம் இதனை விளக்கும் டூடுல் தாயின் வாழ்வில் மிக முக்கியமான தருணங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

கள்ளிச்செடி தனது கர்ப்பத்திலிருந்து தொடங்கி, புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஊட்டமளித்து, நற்பண்புகளுடன் வளர்த்து, மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதை உணர்த்தியுள்ளது.இந்த ஆண்டு அன்னையர் தினத்துக்காக கர்ப்பிணியை போற்றும் வகையில், இந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் இந்தியா உள்ளிட்ட அதிகமான நாடுகளில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமை (இன்று) கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Response