சென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை!

tannee
கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத அளவுக்கு பொய்த்து போனதன் காரணமாக தமிழகத்தில் விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லை, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஆகிய ஏரிகளில் சோழவரம் ஏறி வறண்டுபோய்விட்டது. மற்ற ஏரிகளிலும் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளது.

நகரின் பல இடங்களில் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. வருகிற இடங்களிலும் தண்ணீர் கலங்கலாகவும், நீர் துர்நாற்றத்துடனும் வருகிறது. இதனால் பல இடங்களில் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அவ்வாறு லாரியில் வினியோகிக்கப்படும் தண்ணீர் பல இடங்களில் குடிப்பதற்கு ஏற்றபடி இல்லை என்கிறார்கள். கொடுங்கையூர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் கொண்டு வரும் தனியார் லாரிகளில் குடத்திற்கு இவ்வளவு என்று பணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு குடத்திற்கு அதிக பட்சமாக ரூ.10 வரை வசூலிக்கப்படுகிறது.

பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் சில பெண்கள் கூறியதாவது:-

குடிநீர் குழாய்களில் தண்ணீர் கலர் கலராக வருகிறது. லாரிகளில் வரும் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றபடி இல்லை. ஆனால் ரூ.10-க்கு வாங்கும் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றபடி இருக்கிறது. இப்படி பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் அவலம் சென்னையில் உள்ளது.

Leave a Response