“தமிழ்சினிமாவுக்கு திரைப்பட நகரம் வேண்டும்” – வி.சி.குகநாதன் வலியுறுத்தல்..!

தெலுங்கு திரையுலகத்திற்கு இருப்பதைப்போல தமிழ் சினிமாவுக்கும் திரைப்பட நகரம் வேண்டும் என இன்று நடைபெற்ற ‘இஞ்சி முறப்பா’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் பிரபல சீனியர் இயக்குனரும் நூறு படங்களுக்கு மேல் இயக்கியவருமான வி.சி.குகநாதன்.

எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குனராக இருந்த சகா என்பவர் இயக்கியுள்ள படம் தான் ‘இஞ்சி முறப்பா’.. ஸ்ரீபாலாஜி, சோனி சேரிஸ்டா ஜோடியாக நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்திருக்கிறார்.

‘வேடப்பன்’ என்கிற படத்தை தயாரித்த நிறுவனம் தான் இந்தப்படத்தையும் தயாரித்துள்ளது. இன்று மாலை இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பிரபல இயக்குனர்களான வி.சி.குகநாதன் மற்றும் பவித்ரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் திரையிடப்பட்டுக் காட்டப்பட்ட பாடல்காட்சிகளை பார்த்துவிட்டு பேசிய இயக்குனர் வி.சி.குகநாதன், “தெலுங்கு திரையுலகிற்காக வைசாக்கில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்பட நகரத்தில் பாடல் காட்சிகளை படமாக்கியிருக்கிறீர்கள்.. இதேபோல நமது திரையுலகிற்கும் ஒரு திரைப்பட நகரம் வேண்டும் என்றுதான் மாமல்லபுரம் போகும் வழியில் பையனூரில் நூறு ஏக்கர் நிலத்தில் ஒரு திட்டத்தை ஆரம்பித்தோம்.. அது சில காரங்களால் தடைபட்டு நின்றாலும் ஆறுதலான செய்தியாக மீண்டும் விரைவில் அதற்கான பணிகள் முழுவீச்சில் துவங்கப்பட உள்ளது..” என திரைப்பட நகரத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.