குறும்பட இயக்குனர்களுக்கு விடிவுகாலம் ஏற்படுத்தும் ‘ஸ்டோன் பெஞ்ச்’..!

இன்றைய காலகட்டத்தில் குறும்படங்களின் வீச்சு தமிழ்சினிமாவில் அதிகமாகிவிட்டது உண்மை. குறும்பட இயக்குனர்களை ரசிகர்களிடம் கொண்டுசெல்ல தொலைக்காட்சியும் யூடியூப்பும் மட்டும் போதுமா..? அடுத்தகட்டத்தை எட்ட என்ன வழி..? அதற்குத்தான் தற்போது புதிய வழி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்..

குறும்பட இயக்குனர்களுக்கான எதிர்கால தளத்தை விரிவுபடுத்தும் முயற்சியாக ‘ஸ்டோன் பெஞ்ச்’ (stone bench ) என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளார். இதன்மூலம் சிறந்த குறும்படங்களை தேர்ந்தெடுத்து அவற்றில் ஆறேழு குறும்படங்களை ஒன்றிணைத்து சுமார் 1௦௦ நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படமாக வெளியிட வகை செய்துள்ளார்.

இனிவரும் காலங்களில் இந்த குறும்பட திரைப்படங்கள் சென்னையில் உள்ள சத்யம் மற்றும் பி.வி.ஆர் தியேட்டர்களில் திரையிடப்படும். அதுமட்டுமல்ல.. சினிமாவில் நடிக்க விரும்பி வாய்ப்பு தேடி அலைபவர்களுக்கு வரப்பிரசாதமாக பெஞ்ச் கேஸ்ட் (bench cast) என்ற தளத்தையும் உருவாக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

நடிக்கும் ஆர்வம் இருந்தும் யாரிடம் சென்று வாய்ப்பு கேட்பது என வழி தெரியாமல் அலைபவர்கள் இந்த அமைப்பில் தங்களது சுய விபரங்களையும் திறமைகளையும் பதிந்துவிட்டால் அவர்களது திறமைக்கேற்றபடி வாய்ப்பு தரும் நிறுவனங்களுக்கோ, இயக்குனர்களுக்கோ இந்த பெஞ்ச் கேஸ்ட் (bench cast) மூலமாக இவர்களது பெயர்கள் பரிந்துரை செய்யப்படும். இந்த பெஞ்ச் ஸ்டோன் அமைப்பை இன்று இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னிலையில் நிறுவியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்..