வெண்நிலா வீடு – விமர்சனம்

சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் பத்து சவரன் நகை பறிப்பு என்பது தினசரி நியூஸ் பேப்பரில் தவறாமல் இடம்பெறும் செய்தி.. ஆனால் நமக்கு அது ஒரு செய்தி… அவ்வளவுதான்.. ஆனால் நகையை பறிகொடுத்தவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அது எவ்வளவு பெரிய இழப்பு..?

சரி.. பறிகொடுத்தவர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தினர் என்றால்.? அதுவே இரவல் வாங்கிய நகையாக இருந்தால்..? அதுவும் பகட்டான ஆடம்பரமான தோழியிடம் இருந்து இரவல் வாங்கியிருந்தால்..? அந்த பெண்ணின் தந்தை ஒவ்வொரு காசுக்கும் கணக்கு பார்க்கும் கந்துவட்டி தாதாவாக இருந்தால்?

இப்படி எல்லா ‘இருந்தால்’களையும் ஒன்று சேர்த்து முடிச்சுப்போட்டு சுவராஸ்யமாக ஒரு கதை பின்னினால் அதுதான் ‘வெண்நிலா வீடு’. முடிவு பல பாடங்களை நமக்கு சொல்லித்தருகிறது.

தனக்கு வரும் வருமானத்திற்குள் அழகாக குடும்பம் நடத்தும் ஆனால் மனைவியின் மானத்தை காக்க தனது பூர்வீக நிலத்தை விற்க துணியும் செந்தில்குமார் (மிர்ச்சி செந்தில்), ஆடம்பரமாக எதற்கும் ஆசைப்படாத, பக்கத்து வீட்டு பிள்ளைகளுக்கு கூட இலவசமாக ட்யூசன் சொல்லித்தருகிற விஜயலட்சுமி, பழகிவிட்டால் பல லட்சம் மதிப்புள்ள நகையைக்கூட யோசிக்காமல் இரவல் தருகின்ற பணக்கார, பிடிவாத பெண் சிருந்தா ஆஷப், நகை பறிபோய்விட்டதா, அல்லது நாடகம் ஆடுகிறார்கள் என கண்காணிப்பதற்காக எந்த எல்லைக்கும் போகின்ற சிருந்தாவின் தந்தையான ‘வழக்கு எண்’ முத்துராமன் உட்பட பலரும் நாம் அன்றாடம் பார்க்கும் எதார்த்த மாந்தர்களாகவே உலாவருகின்றனர். அதுவே கதைக்கு பலமாகவும் அமைந்து விடுகிறது.

ஆனால் சீரியஸான பிரச்சனையை கையில் எடுத்திருக்கும் இயக்குனர் வெற்றி மகாலிங்கம் சில இடங்களில் சீரியல் வாசனை அடிப்பதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். காமெடியிலும் சரக்கு குறைவாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் தங்கத்தை வைத்து அலர்ட்டான மெசேஜ் சொன்னதற்காக அவரை பாராட்டலாமே..!