குறையொன்றுமில்லை – விமர்சனம்

விவசாயி தான் மனிதகுலத்தின் ஆதாரம்.. அவனை தவிர்த்துவிட்டு தொழில்துறையில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என கூறுவதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது போலத்தான் என்னும் கருத்தை ஆணி அடித்த மாதிரி சொல்லியிருக்கும் படம் தான் குறையொன்றுமில்லை.

படத்தின் நாயகன் கீதன் நவீன இளைஞனாக இருந்தாலும் கிராமத்தில் இருக்கும் விவசாயி தான் நாட்டின் முதுகெலும்பு என நம்புபவர். அதனாலேயே தான் வேலைபார்க்கும் கார்பரேட் நிறுவனத்தின் ஒரு புராஜெக்டாக கிராமத்தில் இருக்கும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை தாங்களே விலை நிர்ணயித்து வியாபாரம் செய்யவைக்கும் முயற்சியை கையில் எடுக்கிறார்.

அதில் அவர் சந்திக்கும் சவால்களும் போட்டிகளும் தான் மொத்தப்படமும். கார்ப்பரேட் நிறுவனத்தில் விவசாயத்தை அலட்சியப்படுத்தி பார்க்கும் மனோபாவம், அதிலும் நம்பிக்கை தரும் ஓரிருவர், இன்றைய டெக்னாலஜியை மிரட்சியாக பார்க்கும் ஆனால் வாய்ப்பு கிடைத்தால் அதிலும் புகுந்து விளையாடும் கிராமத்து மனிதர்கள் என படம் முழுவதிலும் நம் மனதை தொடும் கதாபாத்திரங்கள் பல உலா வருகின்றன.

இதற்குள் ஒரு மென்மையான காதலையும் இழையோட விட்டிருக்கிறார்கள். நாயகன் கீதன், நாயகி ஹரிதா இருவருக்குமான மென்மையான காதல் முரண்பாடுகள், காதலை சொல்லவிடாமல் தடுக்கும் ஈகோ என ஒரு பக்குவப்பட்ட காதலர்களை இருவருமே பிரதிபலித்திருக்கிறார்கள்.

மது அருந்துகின்ற, புகை பிடிக்கின்ற, அசிங்கமான வசனங்கள் இல்லாத ஒரு படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் கார்த்திக் ரவி, அதில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை சொன்னதற்காகவே அவரை பாராட்டி ஆகவேண்டும். படமாக்கிய விதத்தில் ஆங்காங்கே சின்னச்சின்ன குறைகள் இருந்தாலும் எடுத்துக்கொண்ட கதை அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிடுகிறது. அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் இது.