குழந்தைகளிடத்தில் வன்முறையை தூண்டுமோ, சூர்யாவின் “அஞ்சான்” கேம்!

திருப்பதி பிரதர்ஸ் மற்றும் UTV மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து, லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா மற்றும் சமந்தா நடித்து ஆகஸ்ட் 15, 2014 அன்று உலகெங்கும் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் “அஞ்சான்”. சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பல மறைமுக தடுங்கல்களை கடந்து, பின்னர் அமைதியாக தங்கள் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இத்திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ஜூலை 22, 2014 அன்று சென்னை சத்தியம் திரையரங்கில் திரை பிரபலங்கள், ஊடகவியாளர்கள் மற்றும் குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக காட்சியிடப்பட்டது.

UTU மோஷன் பிக்சர்ஸ், அவர்களுடைய தயாரிப்புகளை பலத்த பொருட்செலவுடன் விளம்பர யுக்தியை பயன்படுத்தி கையாள்வது அவர்களுக்கு கைவந்தக்கலை. இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் “அஞ்சான்” மொபைல் கேம் வெளியிடப்பட்டது. இந்த மொபைல் கேம் “வுரூவி” என்னும் கேம் உருவாக்கும் நிறுவனம் மூலமாக தயாரிக்கப்பட்டு, தென் ஆசியாவின் பிரபல கேம் நிறுவனமான “ஹங்காமா” மற்றும் இந்தியாவின் பிரபல கேம் நிறுவனமான “கேம்சாஸ்திரா” இணைந்து இந்த மொபைல் கேம்’மை வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் கேம் “ஆண்டரைட்” மற்றும் “ஐ ஓ எஸ்” ஆகிய கைப்பேசிகளில் பொருந்தக்கூடிய கேம் ஆகும்.

பெரியவர்கள் உபயோகிக்கும் கைபேப்சி மற்றும் கணினிகளை, அவர்கள் வீட்டில் இருக்கும் பெரும்பாலான குழந்தைகள் கேம் விளையாட உபயோகிப்பது சகஜம். அந்த கேம்’களை குழந்தைகள் தொலைகாட்சிகளில் வரும் விளம்பரங்களை கண்டு கேட்பது வழக்கம். மொபைல் கேம் மற்றும் கணினி கேம்’களில் பல வகைகள் உள்ளன. சில வகையான கேம்’கள் குழந்தைகளின் பிஞ்சு மனதை பாதித்து அவர்களை வன்முறை மற்றும் தவறான யோசனைகளை துண்டும் விதமாக இருக்கும்.

இன்று வெளியிடப்பட்டிருக்கும் “அஞ்சான்” மொபைல் கேம்’யில், ஒரு காரிலிருந்து துப்பாக்கி சுடப்படும், மற்ற காரில் செல்பவர்கள் வேகமாக ஒட்டி செல்வர். அந்த கார்களை துப்பாக்கிகளால் சுட்டு துரத்துபவர் அந்த கேம்’மை ஆடும் நபர் தான். இந்த மொபைல் கேம்’யில் பிஸ்டல் மற்றும் சிறுவகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்படும். பல வகையான ஆயுதங்கள், கார்களை வெடிப்பது மற்றும் புகை மண்டலத்தை உருவாக்கும் காட்சிகள் அமைந்திருக்கும்.

இந்த மொபைல் கேம் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, “அஞ்சான்” திரைப்படத்திற்காக இந்த மொபைல் கேம் பிரத்தியேகமாக வெளியிடப்பட்டுள்ளது தனக்கு உற்சாகத்தை அளித்துள்ளதாக தெரிவித்தார். தன் ரசிகர்கள் இந்த மொபைல் கேம் விளையாட்டை விளையாடுவதற்கு விரும்புவார்கள் என்றும் கூறினார். நடிகர் சூர்யாவிற்கு குழந்தை ரசிகர்கள் அதிகம் உள்ளனர் என்பதை மறந்துவிட்டாரோ என்னவோ! இந்த கேம்’மை சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் விளையாட ஆரம்பித்தால் அவர்களின் பிஞ்சு மனதில் வன்முறை என்னும் கொடிய நோய் பரவும் என்பதை அறவே மறந்துவிட்டார் நடிகர் சூர்யா.