“அண்ணன் படம் என்றாலும் கதை சொன்னால்தான் ஆச்சு” – கண்டிஷன் போட்ட கேமராமேன்..!

‘மைனா’, ‘சாட்டை போன்ற படங்களைத் தயாரித்த ஜான்மேக்ஸ் தனது ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் ‘மொசக்குட்டி’. இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். உப்புதர காசி என்ற கதாபாத்திரத்தில் பசுபதியும் விருமாண்டி என்னும் கதாபாத்திரத்தில் ஜோமல்லூரியும் நடிக்க இன்னொரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.

இந்தப்படத்துக்காக சென்றாயனிடம் ஐம்பது நாள் கால்ஷீட் கேட்டதும் இவ்வளவு நாள் கேட்டால் என்னக்கு மத்த படங்களோட கால்ஷீட் பிரச்னையாகும் என முதலில் தயங்கினாலும் கதையை கேட்டதும் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் உங்க கூடவே இருக்கேன் என்று கூறிவிட்டாராம்..

‘மைனா’, ‘ கும்கி’ போன்ற வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளர் சுகுமார் தான் இந்தப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.. இவரது அண்ணன் தான் இயக்குனர் எம்.ஜீவன். சொல்லப்போனால் சினிமாவுக்குள் சுகுமாரை கைபிடித்து அழைத்து வந்ததே இவர்தான். ஆனால் தற்போது ஜீவன் இயக்கியுள்ள மொசக்குட்டி’ படத்துக்கே முதலில் ஒப்புக்கொள்ள பிகு பண்ணினாராம் சுகுமார்..

இதோ ஜீவன் சொல்றதை கேட்போம்.. “என் தம்பி சுகுமாரை கேமிராமேனாகப் போடலாம் என்று தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் கூறினார். அவன் அதிக சம்பளம் வாங்குகிறான் என்றேன்… நீங்கள் கூப்பிட்டால் பண்ணுவார் கூப்பிடுங்க என்றார். ஜான்மேக்ஸ் சாரே அவரை கூப்பிட்டார். கதையை கேட்டுவிட்டுதான் முடிவை சொல்வேன் என்று சொல்லிவிட்டான். அண்ணனாக கோபம் வந்தாலும் ஒரு இயக்குனராக அவன் நேர்மை எனக்கு பிடித்திருந்தது. அதேபோல கதையை கேட்டுவிட்டு படம் பண்றேன் சம்பளம் அப்புறம் பேசிக்கலாம் என்று சொல்லிவிட்டான்” என்கிறார்.