மலேசிய தமிழ்ப்படத்தில் கதாநாயகி ஆனார் புன்னகைப்பூ கீதா..!

ஒரு தயாரிப்பாளராக ‘புன்னகைப்பூவே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் கீதா.. பின்னாளில் புன்னகைப்பூ கீதாவாகவே மாறிப்போனார். தொடர்ந்து ‘அறிந்தும் அறியாமலும்’, ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ உட்பட பல படங்களை தயாரித்த இவர் இப்போதுகூட ‘நீயெல்லாம் நல்ல வருவடா’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.

‘புன்னகைப்பூ கீதா’விடம் யார் பேசினாலும் ‘நீங்கள் ஹீரோயினா நடிக்கலாமே’ என்று கேட்காமல் வர்றது ரொம்ப கஷ்டம். ஒரு வகையில் பார்த்தால் அதற்கு தகுதியானவரும் கூட. வசீகரமான முகம், வளமான குரல், அசரடிக்கும் உயரம் என்று இந்த கால ஹீரோயின்களுக்கு இம்மியளவும் குறைச்சல் இல்லாதவர்தான் அவர்.

அதனால் தற்போது விதி அவரையும் நடிகையாக அரிதாரம் பூசவைத்துவிட்டது. நம்மவர்கள் கேட்டபோதெல்லாம் சம்மதிக்காத அவரை மலேசிய தமிழ் ஹீரோவான சி கே என்கிற சி.குமரேசன் துரத்திப்பிடித்து ‘மைந்தன்’ என்ற படத்தில் கதாநாயாகியாக நடிக்கவைத்துவிட்டார். இந்தப்படத்தை நடித்து, இயக்கி, தயாரித்ததும் குமரேசன் தான். இன்னொரு கதாநாயகியாக டத்தோ சாமுவேலின் மருமகளான ஷைலா நாயர் நடித்துள்ளார்.

இந்தப்படத்தை பார்த்து பிடித்துப்போன மலேசியாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனமான ‘அஸ்ட்ரோ ஷா’ இந்தப்படத்தை வாங்கி வெளியிடுகிறது. இந்த அஸ்ட்ரோ நிறுவனம் எவ்வளவு பெரியதென்றால் 68 சேனல்களை சொந்தமாக வைத்திருப்பவர்கள். இதன் நிர்வாக இயக்குனர் ராஜாமணி நம் தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான். இதன் முதலாளியும் கூட தமிழர் தானாம். ஆனால் ரகசியம் கருதி பெயரை வெளியில் சொல்லவில்லை.

அதனால் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை சென்னையில் தான் நடத்தவேண்டும் என முடிவுசெய்து இன்று மாலை மிகச்சிறப்பாகவும் நடத்திவிட்டார்கள்.இந்த விழாவில் மலேசிய பிரபலங்கள் பலர் பங்கேற்க அவர்களுடன் இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், சமுத்திரகனி, நடிகர் விமல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.