போலீஸ் கேரக்டர்களை ஒரு கை பார்க்கும் ஸ்ரீராம்

unnamed (42)

‘ஒநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் மிஷ்கினால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் ஸ்ரீராம், விளம்பர மாடலாக இருந்து சினிமாவுக்கு வந்துள்ளவர். தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர், பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையில்தான். மயிலாப்பூர் பி.எஸ். மேல்நிலைப் பள்ளி, பச்சையப்பா கல்லூரி என்று பள்ளி, கல்லூரிக்காலம் முடிந்து விற்பனை, சந்தைப்படுத்துதல் தொடர்பான பட்டமும் படித்தவர். நண்பர்கள் தூண்டுதலால் மாடலிங்கில் ஆர்வம் ஏற்பட, சூர்யா டி.எம்.டி முறுக்குக் கம்பிகள் விளம்பரத்தில் தொடங்கி, சர்ப் எக்ஸெல், இண்டியன் ஏர் ஃபோர்ஸ் ,தினமலர் போன்று பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

விளம்பரங்களில் நடித்த நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்கத் கூடாது என்று நண்பர்கள் உசுப்பி விட சினிமா ஆசை வந்து, ஒரு நண்பர் மூலம் மிஷ்கின் சாரைச் சந்தித்தார். அது ‘முகமூடி’ சமயம். அடுத்த படத்தில் பார்க்கலாம் என்றார்.  அடுத்த படம் ‘ஒநாயும் ஆட்டுக்குட்டியும் தொடங்க முடிவெடுத்ததும் கூப்பிட்டு கொடுத்த வாய்ப்புதான் அதில் வரும்  அதில் வரும் சிபிசிஐடி போலீஸ்  வேடம்.

“அதில் நான் 26 நாட்கள் நடித்தேன். ஒவ்வொரு நாளும் நிறையக் கற்றுக் கொண்டேன். மிஷ்கின் சினிமாவை அணுகும் விதமே தனி. அவரது ஒவ்வொரு அசைவும் ரசிக்க வைக்கும். கற்றுக் கொடுக்கும். நான் ஏற்றிருந்த கேரக்டர் பெயர் ஐசக். இதற்காக சென்னையில் பல இடங்களில் பயணம் செய்தோம். ஒடினோம். சென்னை OMR ரோடு, சாந்தோம் கல்லறை விஜயா ஃபாரம் மால் போன்ற இடங்களில் படப்பிடிப்பில் நடித்தேன்.

மிஷ்கின் ரயிலிலிருந்து தப்பிக்கிற காட்சியில் சிரமப்பட்டு நடித்தேன். பல காட்சிகளை மீண்டும் மீண்டும் எடுத்தார். அவருக்கு திருப்தியானது வரும்வரை விடமாட்டார். அதுபோலவே படிக்கட்டில் விரைவாக நடந்து வந்து மேலதிகாரிகளிடம் செல்போன் ஆதாரம் கிடைத்து விட்டது என்று சொல்ல இறங்கி வரும் காட்சியில் பல டேக்குகள் எடுத்தார். ‘சிறுத்தை’ யாக   ஸ்ரீராம் என்று டைட்டிலில் போட்டு பெருமைப்படுத்தியது மறக்க முடியாதது.” என்று மிஷ்கின் அனுபவங்களைக் கூறுகிறார்.

“‘அந்தாதி’ என்றொரு படத்தில் நடித்துள்ளேன். போலீஸ் அதிகாரி வேடம்தான் ரமேஷ் இயக்கியுள்ளார். அர்ஜுன் விஜயராகவன்தான் கதாநாயகன்.  இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. ஆர். கே. இயக்கும் ‘மைக்கேல் ஆகிய நான்’ படம். இதில் ஜெமினி பேரன் அபிநய்தான் கதாநாயகன். இதிலும் முக்கியமான போலீஸ் வேடம் எனக்கு.
சிம்ஹா நடிக்கும் ‘உறுமீன்’ சக்திவேல் இயக்கத்தில் வளர்கிறது. இதில் முக்கியமான நெகடிவ் வேடத்தில் நடிக்கிறேன். மேலும் இரண்டு புதிய படங்களிலும் நடிக்க இருக்கிறேன். எல்லாமே படம் முழுக்க வருகிற முக்கிய வேடங்கள் தான்” என்றார்.

ஒய்ஜி மகேந்திரா மகள் மதுவந்தி அருண் இயக்கும் ‘சிவசம்போ’ மேடை நாடகத்தில்  ஆவி நாயகம் என்கிற நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்க அவ்வப்போது மேடையேறி வரும் ஸ்ரீராமுக்கு பிடித்த நடிகர்கள் என ரஜினி, கமல் தொடங்கி பிரகாஷ்ராஜ், பசுபதி, விஜய்சேதுபதி, கிஷோர் என்று நீண்டு தம்பி ராமையா வரை பட்டியல் போடுகிறார்.