உதவி செய்தவரின் உடைமையை அபேஸ் செய்த திருடன்!

இன்றைக்கு 'உதவி செய்பவர்களுக்கு உபத்திரவம்' தான் வரும் என்பதாக நிலைமை உள்ளது. யார் ஒருவர் உதவி செய்கிறார்களோ, அவர்களை பலிகடா ஆக்கி, முன்னேறும் உலகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். மனித நேயத்துடன் உதவி செய்பவர்களிடம் திருடும் அளவிற்கு மனித நேயம் குறைந்து வருகிறது. மனசாட்சியே இல்லாமல் இன்றைக்கு விலங்குகளை போல் மனிதர்கள் பல பகுதிகளில் நடந்து கொள்கிறார்கள்.நாய்கள், பூனைகள் உள்பட பல்வேறு விலங்குகள் தனக்கு உதவி செய்வர்களை மறப்பது இல்லை.. ஆனால் மனிதர்கள் உதவி செய்தால், அதனால் சிக்கலைத்தான் பல நேரங்களில் சந்திக்கிறார்கள்.
அது மாதிரியான ஒரு சம்பவம் தான் சென்னை கேகே நகரில் நடந்துள்ளது.
அதாவது திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 39 வயதாகும் நூரில் அமீன் சவுதி அரேபியாவில் பணியாறி வருகிறார். இவர், வெளிநாட்டு விசாவை புதுப்பிப்பதற்காக கடந்த ஏப்ரல் 3-ந் தேதி சென்னை வந்துள்ளார். சென்னையில் கே.கே.நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருக்கிறார் நூரில் அமீன். இரவு உணவு சாப்பிட்டு விட்டு, தங்கும் விடுதிக்கு நடந்து சென்றுள்ளார்.
நூரில் அமீன் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத இளைஞர், நூரில் அமீனிடம் தன் பெயர் நஞ்சுண்ட கவுடா என்று கூறி அறிமுகமாகியிருக்கிறார். தனது உடைமைகள் அனைத்தும் தொலைந்து விட்டதாகவும், பணத்தை இழந்துவிட்டதாகவும், தங்குவதற்கு இடம் வேண்டும் எனவும் பரிதாபமாக உதவி கேட்டார். இதை கேட்டு இரக்கப்பட்ட நூரில் அமீன், நஞ்சுண்ட கவுடாவை, அவரது அறையில் தங்குவதற்கு அனுமதித்து இடம் கொடுத்தார்.
இதற்கிடையே நூரில் அமீன் அறையில் படுத்து தூங்கிவிட்டார். அவரோடு, நஞ்சுண்ட கவுடாவும் படுத்து தூங்கினார். நள்ளிரவில் கண் விழித்து எழுந்து பார்த்தபோது, நூரில் அமீன் அந்த அதிர்ச்சியை கண்டார். தன்னோடு நஞ்சுண்ட கவுடா என்ற பெயரில் தூங்கிய நபரை காணவில்லை. அந்த நபர், நூரில் அமீன் வைத்திருந்த ரூ.500 ரொக்க பணம் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் இந்திய மதிப்பிலான சவுதி அரேபிய ரியால் பணம், 2 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இரவில் பணம் இல்லாமல், உடமைகளை இழ்ந்து தவித்தவருக்கு உதவி செய்தவரிடமே பொருட்களை அந்த நபர் அபகரித்து சென்றுவிட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த நூரில் அமீன், கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், தங்க இடம் கேட்டு, உதவி செய்தவரின் உடைமைகளை திருடி தப்பிய நபர் கர்நாடகா மாநிலம் தும்கர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதாகும் நஞ்சுண்ட கவுடா என்பது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் அவர் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை அழைத்து வந்த போலீசார் விசாரணைக்கு பிறகு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். திருடிய பணத்தை அவர் செலவு செய்துவிட்டார். செல்போன்களையும் விற்றுவிட்டது விசாரணையில் தெரியவந்தது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
