பாஜகவுக்கு குட்பையா? புதிய கட்சியா? அண்ணாமலையின் டெல்லி பயணம் கிளப்பிய பரபரப்பு!

அண்ணாமலை புதிய கட்சி துவங்கப் போகிறாரா என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும், சில தொலைக்காட்சி செய்தி தளங்களிலும் அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சி துவங்க உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இத்தகைய சூழலில் டெல்லி செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இன்னும் இரண்டு நாட்களில் இதுபற்றி விரிவாக பேசுகிறேன்” என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
டெல்லி சென்றுள்ள அண்ணாமலை, பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்புகளுக்குப் பிறகே அவரது அடுத்த அரசியல் முடிவு குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
ஒருவேளை அண்ணாமலை தமிழகத்தில் புதிய கட்சியை தொடங்க முடிவு செய்தால், அது பாஜக தலைமையின் நேரடி அல்லது மறைமுக ஆதரவுடன் இருக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காரணம், பாஜகவுக்கு எதிராக தனித்து ஒரு கட்சியை உருவாக்கி நடத்துவது தற்போதைய அரசியல் சூழலில் மிகப்பெரிய பொருளாதார சவாலாக அமையும்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். தனது பொருளாதார நிலை குறைவாகவே இருப்பதாக அவர் அப்போது தெரிவித்திருந்த நிலையில், புதிய கட்சியை ஆரம்பித்து தனித்து அரசியல் நடத்துவது எளிதல்ல என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், தற்போது தமிழக அரசியலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வேகமாக வளர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக போன்ற முக்கிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில் புதிய கட்சி தொடங்கி மக்கள் மத்தியில் நிலைநிறுத்துவது மிகவும் கடினமான பணியாக இருக்கும். ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு மிகப்பெரிய பொருளாதார ஆதரவு தேவைப்படும். அண்ணாமலைக்கு வெளிப்புற நிதி ஆதரவு கிடைத்தால், அதுகுறித்து அரசியல் சர்ச்சைகளும் எழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை தமிழக பாஜகவின் முக்கிய முகமாக இருந்து வருகிறார். அதே நேரத்தில், அண்ணாமலையின் அரசியல் வளர்ச்சிக்கும் பாஜக வலுவான ஆதாரமாக இருந்து வருகிறது. எனவே அவரை மீண்டும் தமிழக பாஜக தலைவராக நியமிப்பது கட்சிக்கு சாதகமாக அமையும் என ஒரு தரப்பு கருத்து தெரிவிக்கிறது.
மற்றொரு பக்கம், புதிய கட்சி தொடங்குவது அண்ணாமலையின் அரசியல் பயணத்தில் பெரிய சவாலாகவும், எதிர்பாராத பின்னடைவாகவும் மாறக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.
அண்ணாமலை மீண்டும் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்கிறாரா அல்லது புதிய கட்சியை அறிவிக்கிறாரா என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
