Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காதலியை கொன்று விட்டு தற்கொலை நாடகமாடிய காதலன் சிவகங்கையில் கைது!

On June 16, 2025
n6686992631750096436486591f0c1f450072e9c365e46c6c54f194e42297d10f3f511eb284be0d6c8aff23
Share

காதலியை கொன்று விபத்து போல் நாடகமாடி தப்பித்த காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன். இவரது மனைவி புஷ்பா. எல்லப்பன் தவறிவிட்டார்.

இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் ஈஸ்வரி, கணவரை இழந்து வாழ்ந்து வருகிறார். இரண்டாவது மகள் விக்னேஷ்வரி. மூன்றாவது மகள் வித்யா லட்சுமி.

இதில் விக்னேஷ்வரி பிள்ளைப்பாக்கம் அடுத்த சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இங்கு வேலை செய்வதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக 'ஸ்பார்க் விண்டோ' என்ற நிறுவனத்தில் வேலை செய்தார் விக்னேஸ்வரி.

அந்த நிறுவனத்தில் சிவகங்கை மாவட்டம் திட்டக்கோட்டையைச் சேர்ந்த தீபன் (28), என்ற இளைஞரும் வேலை செய்தார்.

அலுவலக வேலை சம்பந்தமாக அடிக்கடி விக்னேஷ்வரியும் தீபனுடன் பேசி வந்த நிலையில் இருவரும் நட்பாகப் பழக ஆரம்பித்தனர். பின்னர் இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது.

ஸ்பார்க் விண்டோ நிறுவனத்தில் காதல் ஜோடிகளாக இருந்த இவர்கள், போதிய ஊதியம் இல்லை என்று கூறி வெவ்வேறு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தனர். இவர்களுக்கிடையேயான காதலும் தொடர்ந்தது. சுமார் ஏழு ஆண்டுகளாக காதலித்திருக்கின்றனர்.

இந்த சூழலில் தீபன் சொந்த ஊருக்கு சென்று, அங்கு சொந்தமாக வீடு கட்டும் பணியை கவனித்து வந்தார்.

அதேசமயம் விக்னேஸ்வரி வீட்டில் அவருக்கு வரன் பார்க்க வீட்டார் தொடங்கினர். இதற்கு விக்னேஷ்வரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

'இப்போதைக்கு வேண்டாம்… கொஞ்ச நாள் ஆகட்டும்' என்று வரும் வரனை எல்லாம் தட்டி கழித்திருக்கிறார்.

இந்த நிலையில் அவரது அம்மா, "உனக்கு கல்யாணம் ஆனதானே சின்னவளுக்கு கல்யாணம் பண்ண முடியும். உனக்கே 27 வயதாகிறது. இனிமேலும் தள்ளிப் போட முடியாது" என கோபமாக பேசி இருக்கிறார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், விக்னேஷ்வரி தனது காதலன் தீபனை தொடர்புகொண்டு, "வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள்… அம்மாவை என்னால் சமாளிக்க முடியவில்லை. நாம் உடனே திருமணம் செய்து கொள்ளலாம்" என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு தீபன், "வீட்டு வேலை எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. பிரச்சனைகள் எல்லாம் முடியட்டும். பிறகு திருமணத்தை பற்றி பேசிக்கொள்ளலாம்" என்று மறுத்துள்ளார்.

இதையெல்லாம் காதில் வாங்காத விக்னேஸ்வரி தனது தரப்பு சூழ்நிலையை மட்டும் சொல்லி, உடனே திருமணம் செய்து கொள்ளலாம் என்று அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில்தான் கடந்த மார்ச் 31ஆம் தேதி சிவகங்கையில் இருந்து தாம்பரம் வந்த தீபன் அங்கு ஒரு அறை எடுத்து தங்கியிருக்கிறார்.

அடுத்த நாள் ஏப்ரல் 1ஆம் தேதி, தீபன் தனது நண்பர் ஒருவரிடம், விக்னேஷ்வரிக்கு தொடர்பு கொண்டு, பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம். வெரிஃபிகேஷனுகாக நீங்கள் நேரில் வரவேண்டும் என்று கூப்பிடு என்று சொல்ல சொல்லியுள்ளார்.

தீபனின் நண்பரும் இதை அப்படியே சொல்ல, ஏற்கனவே பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்திருந்த விக்னேஷ்வரி, தீபன் நண்பர் சொன்னதை உண்மை என்று கருதி, அவர் சொன்ன முகவரிக்கு தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

அந்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அங்கு தீபன் இருந்ததை பார்த்து விக்னேஸ்வரி அதிர்ச்சியடைந்தார்.

அப்போது, "உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்றுதான் நண்பர் மூலம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக சொல்லி அழைத்தேன்" என்று தீபன் சொன்னதும் மகிழ்ச்சி அடைந்த விக்னேஸ்வரி எங்கேயாவது வெளியே போகலாம் என்று அழைத்துள்ளார்.


இதையடுத்து இருவரும் விக்னேஷ்வரியின் ஸ்கூட்டியில் தாம்பரத்தில் உள்ள அறைக்கு சென்றனர்.

தொடர்ந்து கடையில் சாப்பிட்டுவிட்டு தி.நகருக்கு சென்று ஷாப்பிங் செய்தனர். அப்போது தீபன் விக்னேஷ்வரிக்கு ஒரு புடவை எடுத்து பரிசளித்தார்.

ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் போது செல்லும் வழியில் திருமணம் பற்றி விக்னேஷ்வரி பேச ஆரம்பித்தார்.

அப்போது, 'கொஞ்ச நாள் வெயிட் பண்ணு… பிரச்சனை எல்லாம் முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கலாம்' என்று சமாதானமாக பேசி அழைத்துச் சென்று விக்னேஸ்வரியின் வீட்டருகே விட்டுவிட்டு சென்றார் தீபன்.

இதை விக்னேஷ்வரி அம்மா பார்த்து கோபமடைந்தார். அவரை திட்டி அடித்துள்ளார். 'எவ்வளவு தைரியம் இருந்தால்… 'நீ அவன கூட்டிகிட்டு வீட்டுகிட்டேயே வருவ. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க. நாலு பேரு தப்பா பேச மாட்டாங்களா' என கோபமாக கத்தியுள்ளார்

இதனால் விக்னேஸ்வரிக்கும் அவரது அம்மா புஷ்பாவுக்கும் இடையே பயங்கர சண்டை நடந்துள்ளது.

ஒரு கட்டத்தில் விக்னேஷ்வரி, 'நீங்கள் யாரும் எனக்கு வேண்டாம். நான் அவனுடனே போகிறேன்' என ஸ்கூட்டியை எடுத்து கிளம்பிவிட்டார்.

அப்போது அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து தீபன் பஸ் ஏறுவதை பார்த்த விக்னேஸ்வரி அந்த பஸ்ஸை பின்தொடர்ந்து ஸ்கூட்டியில் சென்றார்.

இந்நிலையில் தீபன் தாம்பரத்தில் இறங்கியதும், அவரை தனியே அழைத்துச் சென்று சந்தித்து பேசிய விக்னேஸ்வரி, 'வீட்டில் இப்படி பிரச்சனையாகிவிட்டது. இனி நான் வீட்டுக்கு செல்ல மாட்டேன். உன் கூடவே வருகிறேன், என்று சொல்ல, தீபன் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டிருக்கிறார். தொடர்ந்து, விக்னேஷ்வரியை அழைத்து கொண்டு தாம்பரத்தில் உள்ள அறைக்கு சென்றுள்ளார் தீபன்.

பின்னர் இரவு 12 மணியளவில், "உன்னை வீட்டில் விட்டுவிடுகிறேன்" வா என்று விக்னேஷ்வரியை அழைத்துக்கொண்டு ஸ்கூட்டியில் கிளம்பியுள்ளார்.

விக்னேஷ்வரியின் வீட்டை நெருங்கும் வேளையில், "வீட்டில் சண்டை போட்டு வந்துவிட்டேன். இப்போது எப்படி நான் வீட்டுக்கு செல்வேன்" என்று விக்னேஷ்வரி மீண்டும் மீண்டும் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, ஒரு கட்டத்தில் விக்னேஷ்வரியை தீபன் ஓங்கி அறைந்துள்ளார்.

இதனால் ஸ்கூட்டி மேல் மயங்கி விழுந்த விக்னேஸ்வரியை, தன்னிடமிருந்த சுத்தியை எடுத்து தலையில் வேகமாக அடித்துள்ளார் தீபன்.

இதனால் ரத்த வெள்ளத்தில் வலியில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே விக்னேஸ்வரி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஏப்ரல் 2ம் தேதி அதிகாலை சுமார் 1.30 மணியளவில், விக்னேஷ்வரியின் வீடருகே சுமார் 100மீட்டர் தூரத்தில் சுடுகாடு பகுதியில் நடந்துள்ளது.

விக்னேஸ்வரியை கொன்ற பிறகு, இதை ஒரு விபத்தாக மாற்றி விடலாம் என்று திட்டமிட்ட தீபன் என்ன செய்வது என்று யோசித்து இருக்கிறார்.


அப்போதுதான் அருகில் ஒரு டிரான்ஸ்பார்மர் இருந்தது அவர் கண்ணில் பட்டது.

இதையடுத்து அந்த ஸ்கூட்டியை எடுத்து டிரான்ஸ்பார்மர் பக்கத்தில் சாய்த்து போட்டுவிட்டு, விக்னேஸ்வரியையும் தரதரவென இழுத்துச் சென்று அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்துக்குள்ளானது போல் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்த சூழலில் அதிகாலையில் அந்தப் பக்கமாக சென்ற நபர்கள் ஒரு பெண் இறந்து கிடக்கிறார் என்று காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து, அவரது வீட்டுக்கும் தெரியப்படுத்தி இருக்கின்றனர்.

இதை விபத்தாக நினைத்து இறுதிச் சடங்கிற்கான பணிகளை எல்லாம் விக்னேஷ்வரி வீட்டில் செய்தனர்.

இந்த சூழலில விக்னேஸ்வரியின் தங்கை, "என் அக்கா உன் கூட போறதா சொல்லிட்டு தான் நேத்து வந்தா… ஆனா இரவு இறந்து கிடக்கிறா… விபத்துன்னு சொல்றாங்க" என தீபனுக்கு போன் போட்டு சொல்ல, இதைக் கேட்ட தீபன், என்ன ஆக்சிடண்ட்டா? என திரும்ப திரும்ப கேட்டு அதிர்ச்சியடைவது போல் நடித்துள்ளார்.

இதற்கிடையே போலீசார் விக்னேஸ்வரி கிடந்த இடத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விபத்து நடந்ததற்கான எந்த ஆதாரமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

கூடவே விக்னேஸ்வரியை ரத்தத்தோடு இழுத்து வந்த சுவடுகள் இருந்தன.


இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் எஸ்ஐ இசக்கிராஜா, காவல் ஆய்வாளர் தர்மலிங்கம், எஸ்பி தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் உள்ளிட்டோர் விக்னேஷ்வரி வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.

அவரது தங்கை வித்யாலட்சுமியிடம் விசாரித்ததில் போலீசாருக்கு சில தகவல்கள் கிடைத்தது. தீபனை காதல் செய்த விஷயமும் தெரியவந்தது.

விக்னேஷ்வரியின் தங்கை தீபனிடம் பேசிய போது, ஆட்டோமேட்டிக்காக கால் ரெக்கார்டு ஆகியுள்ளது. இதை போலீசார் கேட்டபோது, ஆக்சிடென்டா…ஆக்சிடென்டா என தீபன் திரும்பத் திரும்ப கேட்டுள்ளார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுவடைந்து தீபன் மொபைலுக்கு போன் செய்தனர்.

ஆனால் அவரது மொபைல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனே காஞ்சிபுரம் எஸ்பி சண்முகம், தீபன் மொபைல் எண்ணை சைபர் கிரைமுக்கு அனுப்பி, அந்த நம்பரை ட்ரேஸ் செய்து தகவல் கொடுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து டிஎஸ்பி கீர்த்திவாசன் சைபர் கிரைம் உதவியுடன் விசாரணையை தீவிரப்படுத்தினார். இந்த நிலையில் முதலில் தீபன் லொகேஷன் கிளாம்பாக்கத்தை காட்டியது.

இதனால் போலீசார் கிளாம்பாக்கம் கிளம்பினர். ஆனால், தீபன் லொகேஷன் கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு என அடுத்தடுத்து நகர்ந்தது.

இதனால் அவர் பேருந்தில் செல்கிறார் என்று சந்தேகித்த போலீசார் அந்த லொகேஷனை பின் தொடர்ந்து சென்றனர்.

இறுதியாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பேருந்தை மறித்து நிறுத்தி தீபனை கைது செய்தனர்.


அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், "விக்னேஸ்வரியை கொலை செய்யும் திட்டத்தோடுதான் தாம்பரம் வந்தேன் சுத்தியும் கையோடு வாங்கிகொண்டு. ஆனால் அவளைப் பார்த்ததும் கொலை செய்ய மனசு வரவில்லை. அதனால் சமாதானமாக பேசி வீட்டருகே விட்டு விட்டு வந்தேன். ஆனாலும் தொடர்ந்து வந்து திருமணம் செய்து கொள்ளும்படி நச்சரித்தார். இதனால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், விக்னேஷ்வரி ஸ்கூட்டி மீது விழுந்துவிட்டார். அப்போது நான் வைத்திருந்த சுத்தியை எடுத்து தலையில் அடித்ததால் இறந்து விட்டார். என்னை தொடர்ந்து கட்டாயப்படுத்தியதால் வேறு வழியில்லாமல் இப்படி செய்துவிட்டு, விபத்து நடந்தது போல் செட்டப் செய்துவிட்டு லாரி பிடித்து கிளாம்பாக்கம் வந்துவிட்டேன்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது தீபன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய பெண்ணை காதலனே அடித்து கொன்ற சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.