Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ராஜேஷின் எழுத்து பேசப்படும் - இயக்குநர் பா.இரஞ்சித்

On February 16, 2022
Guthiraivaal Music
Share
இயக்குநர் பா.இரஞ்சித்தின் 'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேஷனுடன், நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார். கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி பாட்டீல் நாயகியாக நடித்திருக்கிறார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் பிரதீப் குமாரின் பிரமாண்ட இசைக்குழுவினர் மூலம் படத்தின் பாடல்கள் நேரடியாக இசைக்கப்பட்டது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இசை நிகழ்ச்சியை தொடர்ந்து இயக்குநர் பா.இரஞ்சித் இசைத்தொகுப்பை வெளியிட, ‘குதிரைவால்’ படக்குழுவினர் பெற்றுக்கொண்டார்கள். நிகழ்ச்சியில் நடிகர் கலையரசன் பேசுகையில், “குதிரைவால் எனக்கு மிகவும் ஸ்பெஷல் படம். ராஜேஷ் முதன்முதலில் இந்தப் படத்தை நான்கரை மணி நேரம் கதை சொன்ன போதே கதை என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்தின் மூலம் நிறைய கற்றுக்கொள்வேன் என்று நம்பினேன். எங்கள் தயாரிப்பாளர் பா.இரஞ்சிதுக்குக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த திரைப்படத்தை நீங்கள் திரையரங்கில் பார்க்கும் போது உங்களுக்கு புதிய உணர்வு ஏற்படுவதோடு, முற்றிலும் வித்தியாசமான உணர்வையும் ஏற்படுத்தும். படத்தை வெற்றிகரமாக திரையரங்கில் வெளியிடும் யாழி மற்றும் தயாரிப்பாளர் விக்னேஷுக்கும் நன்றி.” என்றார். படத்தின் கதாநாயகி அஞ்சலி பாட்டீல் பேசுகையில், “காலா மற்றும் குதிரைவால் போன்ற பல்வேறு திரைப்படங்கள் மூலம் தனக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கிய இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. இந்த படம் சமத்துவ சமுதாயத்தை முன்னிறுத்துகிறது. எந்த படிநிலையும் இல்லாமல் ஜனநாயக வழியில் திரைப்படம் எடுப்பது சாத்தியம். கலைக்காக கலையை உருவாக்க முடியும் என்பதை குதிரைவால் படம் உணர்த்தியது.” என்றார். இசையமைப்பாளர் பிரதீப் குமார் பேசுகையில், ”இந்த பாணியில் நான் இதுவரை பணியாற்றவில்லை. எல்லாமே ஒரு கண்டுபிடிப்பு போல தான் இருந்தது. எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள் மனோஜ், ஷ்யாம் மற்றும் தயாரிப்பாளர்கல் விக்னேஷ், பா.இரஞ்சித் ஆகியோருக்கு நன்றி.” என்று பேசினார். இயக்குநர்களில் ஒருவரான மனோஜ் லினோனல் ஜாசன் பேசுகையில், “இந்தப் படம் ராஜேஷின் படைப்பு. இந்த படம் மூன்று வருடங்களுக்கும் மேலாக எங்களுக்கு சவாலாக இருந்தது. இந்த படத்திற்காக எங்களுடன் பயணித்த பத்து பேருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். வெவ்வேறு திரைப்பட விழாக்களில் இப்படம் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மூலம் இந்த படத்தின் மீது எங்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. நான் இயக்குநர் பா.இரஞ்சித்தின் பெரிய ரசிகன், அதனால் தான் இப்படி ஒரு படத்தை இயக்க முடிந்தது என்று நினைக்கிறேன். இந்த படத்திற்காக நான் தயாரிப்பாளரை தேடிக்கொண்டிருந்தேன். அப்போது மக்கள் நிதி மூலம் இதை தயாரிக்கலாமா என்று நண்பர் விக்னேஷிடம் ஆலோசித்தேன். அப்போது அவரே தயாரிக்க முன்வந்தார். அவர் இல்லை என்றால் இந்த படம் இந்த நிலைக்கு வந்திருக்க்ககாது" என்றார். மற்றொரு இயக்குநர் ஷயாம் சுந்தர் பேசுகையில், ”குதிரைவால் படத்தை பற்றி சொல்லும் போது எழுத்தாளர் ராஜேஷை பற்றி பேசாமல் இருக்க முடியாது. இந்த படம் உருவாக அவர் தான் காரணம். அதுமட்டும் அல்ல, அவருடைய கதையின் மூலம் தனிப்பட்ட முறையில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். என் மூளையில் இருந்த பல கேள்விகளுக்கு அவருடைய எழுத்து பதில் அளித்து என்னை தெளிவுப்படுத்தியது. அதற்கும் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார் தயாரிப்பாளர் விக்னேஷ் பேசுகையில், “நான் தொழில்நுட்ப துறையை சார்ந்தவன், இப்பவும் அதே துறையில் தான் இருக்கிறேன். பொதுவாக ஒரு நிறுவனத்தை தொடங்குவோம், அந்த நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்த பிறகு, யார் எந்த வேலையை செய்கிறார்கள், என்பதே நமக்கு தெரியாது. இப்படி தான் பல பெரிய நிறுவனங்கள் இருக்கிறது. ஒரு கட்டத்திற்கு சென்று நின்றுவிடுவோம். அப்படி ஒரு சூழலில் தான் மனோஜ் என்னை அனுகினார். அவருடைய நேர்மையான அனுகுமுறையால், நாமும் எதாவது வகையில் இதில் ஈடுபட வேண்டும் என்று நான் யோசித்தேன். அதனால் தான் நானும் இதனுள் அழுத்தமாக இறங்கிவிட்டேன். அதனால் தான் இந்த படம் திரையரங்கில் வெளியாக வேண்டும், என்று விரும்பினேன். மக்கள் பார்க்கனும் அவர்கள் கைதட்ட வேண்டும், அது தான் இந்த கலைஞர்களின் உழைப்புக்கு இணையாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால் தான் திரையங்கில் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதேபோல், பா.இரஞ்சித் சார் நிறைய உதவி செய்தார். ஆரம்பத்தில் இருந்து எங்களை சரியான பாதையில் அழைத்து சென்றார். அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் நன்றி.” என்றார். இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில், “ரொம்ப மகிழ்ச்சியான நிகழ்வு இது. சினிமாவுல பக வகைகள் இருக்கு, அதை பார்த்து தான் சினிமாவுக்கே நான் வந்தேன். நான் பார்த்த சினிமாவால் பாதிக்கப்பட்டு சினிமா எடுத்தேனா, இந்த சமூகம் அதுபோன்ற ஒரு சினிமாவை எடுக்க விடவில்லை. அதுபோன்ற ஒரு ரசிகராக தான் நான் மனோஜை பார்க்கிறேன். ஜெனி மூலமாக மனோஜ் மற்றும் அவருடைய குழுவை சந்தித்தேன். அப்போது ராஜேஷ் கதை சொன்ன போது நான்கு மணி நேரம் கதை சொன்னார். நான் புத்தகத்தை படித்துவிடுகிறேன், என்று கேட்டேன். அதை கொடுத்தார்கள். ஆனால், அது ஐந்நூறு பக்கங்கள் இருந்தது. பிறகு மனோஜ் இயக்கிய குறும்படம் ஒன்றை பார்த்தேன், மிக சிறப்பாக இருந்தது. அந்த குறும்படத்தின் மேக்கிங் போன்ற அம்சங்கள் என்னை வெகுவாக கவர்ந்ததோடு, மனோஜ் மீது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. எனக்கு பொதுவாக தன்னிச்சை படைப்பாளிகள் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. அவர்களால் தான் புதிதாக சொல்ல முடியும், ரசிகர்களுடைய கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு கதை சொல்வார்கள். அதுபோல தான் குதிரைவால் படத்தை நான் பார்த்தேன். குதிரைவால் திரைக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. ராஜேஷோட பேச்சு, நம்பிக்கை சம்மந்தமான பேச்சு போன்றவை கவர்ந்தது. இந்த படத்தில் கலையரசன் மற்றும் அஞ்சலி மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கலையரசனுக்கு மிக முக்கியமான படமாக இருக்கும். அதேபோல் ராஜேஷின் எழுத்து பேசப்படும். அந்த எழுத்து தான் என்னை கவர்ந்தது. ஒரு அரசியலை நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அதே சமயம் மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் விதம் வியப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் அவர் வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறார். இந்த வயதுக்கு அவரிடம் அனுபவம் என்பது மிகப்பெரியது. அது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. குதிரைவால் அற்புதமான படமா? என்றால், இல்லை. சில குறைகள் இருக்கிறது. ஆனால், அந்த குறைகளை மறந்து, படத்தில் சொல்லப்பட்டிருக்கும் புதிய விஷயங்கள் இருக்கும். இந்த கதையை கையாண்ட விதம், காட்சிகளை படமாக்கிய விதம், என அனைத்தும் தமிழ் சினிமாவுக்கு மிக புதிதாக இருக்கும். இந்த படத்தோட அனுபவம் ரசிகர்களுக்கு மிக புதியதாகா இருக்கும். விக்னேஷ் இந்த படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும், என்று உறுதியாக இருந்தார். காரணம், இந்த படம் திரையரங்க ரசிகர்களுக்கான படம். யாழி உடன் சேர்ந்து நீலம் சேர்ந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறோம் நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.